கேரளாவில் இருந்து டெல்லி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினார்கள்.
தடம் புரண்டு விபத்து
கேரள மாநிலம் எர்ணாகுளம்–டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதின் இடையே மங்களா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதியம் 1.15 மணிக்கு எர்ணாகுளம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு மங்களா எக்ஸ்பிரஸ்(வண்டி எண்12617) புறப்பட்டு சென்ற அந்த ரெயில் கொங்கன் வழித்தடத்தில் மாலை 6.10 மணியளவில் தானே அருகே சென்று கொண்டிருந்தபோது, ரெயிலின் எஸ்–9, எஸ்–10, பாண்ட்ரி கார் ஆகிய 3 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே இறங்கின.
இதனால் ரெயில் பலமாக குலுங்கியது. விபரீதத்தை உணர்ந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
பயணிகள் உயிர் தப்பினர்
இந்த விபத்தில் அந்த ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். மேலும் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் கொங்கன் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் விபத்து நிவாரண ரெயிலும் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணிகள் துரித கதியில் நடந்தன.
இந்த சம்பவத்தால் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்ற தண்டவாளங்கள் வழியாக திருப்பிவிடப்பட்டன. விபத்து காரணமாக மங்களா எக்ஸ்பிரஸ் ரெயில் வெகுநேரமாக அங்கிருந்து புறப்படாமல் நின்று கொண்டிருந்தது. இதன் காரணமாக அந்த ரெயிலில் வந்த பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment