பெங்களூரு மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த கேரள சட்டசபை சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கேரள சட்டசபை சபாநாயகராக பணியாற்றி வந்தவர் ஜி.கார்த்திகேயன்.
பெங்களூருவில்...
கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஜி.கார்த்திகேயன் கடந்த ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் மீண்டும் அவர் புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள எச்.சி.ஜி. கேன்சர் சிறப்பு மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறப்பு நிபுணர் டாக்டர் பி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களாக அவரது உடல்நிலை கவலை அளிப்பதாக இருந்தது. உள்ளுருப்புகளின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து வந்தன.
மரணம்
இந்த நிலையில் நேற்று காலை 10-30 மணி அளவில் கேரள சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் மரணம் அடைந்தார். உள்ளுருப்புகள் செயல் இழந்ததால் அவர் மரணம் அடைந்ததாக மருத்துவமனையின் இயக்குனர் தினேஷ் மாதவன் தெரிவித்தார்.
ஜி.கார்த்திகேயன் மரணம் அடைந்த தகவல் அறிந்த கர்நாடக உள்கட்டமைப்பு மற்றும் செய்தித்துறை மந்திரி ரோஷன் பெய்க், போலீஸ் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி, ஹாரீஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ஜி.கார்த்திகேயன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விமானம் மூலம்
பின்னர் ஜி.கார்த்திகேயன் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் இருந்து பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு அவரது உடல் ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அங்கிருந்து 3-30 மணி அளவில் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
குடும்பம்
மறைந்த ஜி.கார்த்திகேயனுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கேரள மாணவர் காங்கிரஸ் தலைவராக ஜி.கார்த்திகேயன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் தொழிற்சங்க தலைவராக பணியாற்றினார். 1995, 2001-ம் ஆண்டுகளில் கேரளாவில் ஏ.கே.அந்தோணி தலைமையில் அமைந்த காங்கிரஸ் மந்திரிசபையில் முறையே மின்சாரம், உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். திருவனந்தபுரம் வடக்கு, ஆர்யநாடு, அருவிக்கரா தொகுதிகளில் இருந்து 6 முறை கேரள சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் கேரள காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அருவிக்கரா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஜி.கார்த்திகேயன் சட்டசபை சபாநாயகராக பணியாற்றி வந்தார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக அறித்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை கட்சி மேலிடம் ஏற்கமறுத்துவிட்டதால் தொடர்ந்து சபாநாயகராக பணியாற்றி வந்தார்.
இரங்கல்
சபாநாகயர் ஜி.கார்த்திகேயன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் கேரள அடித்தட்டு மக்களின் தலைவராக விளங்கினார். கேரள மக்களுக்காக அவரது வாழ்க்கையை அர்ப்பணித்து பணியாற்றினார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா அமைதியடையட்டும்” என்று கூறியுள்ளார்.
கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி “சபாநாயகரின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.” என்று குறிப்பிட்டு உள்ளார். கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சுதீரன்”எனது நீண்டநாளைய நண்பரை இழந்துவிட்டேன். இந்த இழப்பை தாங்க முடியவில்லை“ என்று கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய ராணுவ மந்திரியுமான ஏ.கே.அந்தோணி தனது இரங்கல் செய்தியில் “கார்த்திகேயனின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் கேரள மாநிலத்துக்கும் மிகப்பெரிய இழப்பு” என்று குறிப்பிட்டு உள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment