டெல்லியில் பிரதமர் மோடியுடன் 55 தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு; ஒரே குழுவாக சென்று, சட்டசபை தீர்மானத்தை வழங்கினார்கள்
கர்நாடக அரசு காவியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்ட தீர்மானித்து இருக்கிறது.
அணை கட்ட கர்நாடகம் முடிவு
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரின் பங்கை ஏற்கனவே கர்நாடகம் முறைப்படி வழங்க மறுத்து வரும் நிலையில் மேலும் 2 அணைகளை கட்டினால், தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும். இதனால் கர்நாடகம் புதிதாக 2 அணைகள் கட்டுவதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. விவசாயிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
தமிழக சட்டசபையில் தீர்மானம்
அத்துடன், கர்நாடகம் அணைகள் கட்ட அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த தீர்மானத்தை அவரிடம் வழங்குவார்கள் என்று அப்போது முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் நேற்று முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
55 எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு
இந்த நிலையில், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தபடி, பாராளுமன்ற இரு சபைகளையும் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் 54 பேர் நேற்று டெல்லியில் பாராளுமன்ற சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான மு.தம்பிதுரை தலைமையில் குழுவாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்கள். இவர்களில் 48 பேர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 4 பேர் தி.மு.க.வையும், ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியையும் (டி.கே.ரங்கராஜன்), மற்றொருவர் பாட்டாளி மக்கள் கட்சியையும் (டாக்டர் அன்புமணி ராமதாஸ்) சேர்ந்தவர்கள்.
புதுச்சேரியைச் ராதாகிருஷ்ணன் எம்.பி.யும் (என்.ஆர்.காங்கிரஸ்) இந்த குழுவினருடன் சென்று இருந்தனர்.
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 55 எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யான அம்பேத் ராஜனும் தமிழக எம்.பி.க்கள் குழுவினருடன் சென்று இருந்தார். இவர் தமிழர் ஆவர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறவில்லை.
தடுத்து நிறுத்த கோரிக்கை
எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியுடன் 25 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் தமிழக சட்டசபையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை
அமைக்க வேண்டியும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மேற்கொண்டு வரும் நடவடிக்கையை தடுப்பது குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்கி கூறினார்கள். அந்த தீர்மானத்தையும் அவரிடம் வழங்கினார்கள்.
அப்போது ஒவ்வொரு கட்சியின் சார்பில் ஒருவரை பேசுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அதன்படி மு.தம்பிதுரை (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.) உள்ளிட்டோர் பேசினார்கள்.
மோடி உறுதி
கர்நாடகம் அணைகள் கட்டும் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில முதல்–மந்திரிகளையும் அழைத்து பேசுமாறு அப்போது பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக எம்.பி.க்கள் கூறியதை ஆர்வத்துடன்
கேட்டு அறிந்த பிரதமர் மோடி, சம்பந்தப்பட்ட துறையிடம் தற்போதைய நிலை குறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஏற்கனவே அறிவுறுத்தி இருப்பதாகவும் மற்றும் இதுகுறித்து மேலும் பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்தார்.
தி.மு.க. சார்பில் மனு
இந்த சந்திப்பின் போது தி.மு.க.வின் சார்பில் பிரதமரிடம் தனியாக ஒரு மனுவும் கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை போர்க்கால அடிப்படையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், மேகதாது பகுதியில் கர்நாடகம் புதிதாக இரு அணைகளை கட்ட முயற்சிப்பது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும், இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தையும் மீறும் செயல் என்பதால் அந்த முயற்சியை உடனடியாக நிறுத்தும்படி அந்த மாநிலத்துக்கு அறிவுறுத்துமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சந்திப்பு முடிந்த பின் எம்.பி.க்கள் வெளியே வந்தனர்.
மு.தம்பிதுரை
அப்போது துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான மு.தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:–
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி வழங்குவது இல்லை என்றும், கோர்ட்டு தீர்ப்பை மதித்து நடப்பது இல்லை என்றும் பிரதமரிடம் கூறினோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு கர்நாடகம் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.
நாங்கள் கூறிய விவரங்களை கேட்டு அறிந்த பிரதமர் மோடி, விரைவில் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு மு.தம்பிதுரை கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment