பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக பாகிஸ்தான் வருவார் என்று பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்காக சார்க் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன் அடுத்த மாநாடு வரும் 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
6 -வது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சர்தாஜ் ஆசிஸ் கூறியதாவது: - “இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு வருகை தருவார்” என்று தெரிவித்தார். இந்தியா- பாகிஸ்தான் உறவு பற்றி பேசிய அவர், நாங்கள் பேச்சு வார்த்தையை துவங்கும் போது பொது நலனுக்காக அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசுவோம்” என்று கூறியதாக அங்குள்ள செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்திய வெளியுறவு துறை செயலர் வருகையின் போது , வாய்ப்பை பயன்படுத்தி இருநாடுகளும்
இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்துக்கொண்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நம்பகத்தன்மை முக்கிய பிரச்சினையாக உள்ளதாகவும் நம்பகத்தன்மை ஏற்பட்டால் பிற விவகாரங்களிலும் முன்னேற்றம் ஏற்படும் என்றார். அதேவேளையில்,
சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் பாகிஸ்தான் வருகை குறித்து பேசிய அவர், சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் வரும் மார்ச் 23-ல் பாகிஸ்தானுக்கு சீன அதிபர் வருகை தரமாட்டார் எனவும் தெரிவித்தார். எதிர்கட்சிகளின் போராட்டத்தால் கடந்த ஆண்டு தனது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை சீன அதிபர் ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சார்க் நாடுகளுடன் உறவை மேம்படுத்தும் நோக்கில் ”சார்க் யாத்ரா” எனும் பெயரில் சார்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை செயலர் எஸ். ஜெய்சங்கர் கடந்த மார்ச் 3 ஆம் தேதி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது நினைவுகூறத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment