தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை யொட்டியும், கோவில் வழிபாட்டிலும் கடந்த 500 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது.
இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பதால், தை மாதம் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தடையை மறுஆய்வு செய்யும்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். எனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு, தமிழக அரசு தடையை எதிர்த்து அவசர சட்டம் இயற்றி அனுமதி வழங்க வேண்டும். வனவிலங்கு பட்டியலில் காளையை மத்திய அரசு நீக்கி ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரவையின் மாநில தலைவர் பி.ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களிலுள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நடந்த தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தஞ்சை விடுதலைவேந்தன் உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்குப் பின் பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment