பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அலங்காநல்லூரில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது, மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், சேலம்
உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதில், மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது.
இந்த போட்டியைக் காண வெளிநாடுகளில்
இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூருக்கு வந்து குவிவார்கள். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? நடைபெறதா என்று தெரியாத நிலையிலும் ஏராளமான வெளிநாட்டினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், விலங்குகளை, காட்சிப்படுத்த தடை விதிக்கும் அரசாணையில், சிங்கம், புலி, கரடி, குரங்கு ஆகியவற்றோடு, காளைகளையும் சேர்த்து, மத்திய அரசு, 2011ல் ஒரு அரசாணை வெளியிட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடையடைப்பு போராட்டம், உண்ணாவிரதம் போன்றவைகளை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நடத்தினர். தமிழக அரசும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், வனவிலங்குகள் பாதுகாப்பு பட்டியலிலிருந்து காளைகள் நீக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நேற்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கறுப்புக் கொடி போராட்டம்
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அலங்காநல்லூரில் உள்ள அனைத்து கடைகளிலும், வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அலங்கநல்லூரில் ஆய்வு
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை உச்சநீதிமன்றம் நீக்கினால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவது குறித்து, தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் மதுரை, அலங்காநல்லூரில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வருவாய் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
தை திருநாளான முதல் தேதியில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்காக அவனியாபுரம் பெருங்குடி, சோழங்குருணி, நல்லூர், கோனார்பட்டி, கரிசல்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை, பருத்தி, கொட்டை, புண்ணாக்கு, மண்டை வெல்லம் மற்றும் தானிய வகைகளை கொடுத்தும், வயல்வெளியில் காளைகளை கட்டி போட்டு மணல் குவியலில் பாய விட்டும், நீச்சல் பயிற்சி போன்ற பயிற்சிகளை செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதேபோல பாலமேடு பகுதியிலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதற்காகவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கான தடையை உச்சநீதிமன்றம் நீக்குமா? மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment