சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சுரங்க முறைகேடு
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் எடியூரப்பா முதல்–மந்திரியாக இருந்தபோது, சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவர், பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்றபோது, சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஜனார்த்தன ரெட்டி முக்கிய பங்கு வகித்தவர். ஜனார்த்தன ரெட்டி பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவர், பல்லாரியில் ஓபலாபுரம் கனிம நிறுவனம் என்ற பெயரில் சுரங்க நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், ஓபலாபுரம் கனிம நிறுவனம் சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் இரும்பு தாது வெட்டி எடுத்தல், சுரங்கத்தை குத்தகைக்கு விட்டதில் முறைகேடு, ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இருந்து கர்நாடகத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள சுரங்க பகுதியை ஆக்கிரமித்தல், எல்லைகளை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
ஜனார்த்தன ரெட்டி கைது
மேலும் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜனார்த்தன ரெட்டி மீது குற்றச்சாட்டு சுமத்தி கர்நாடக மாநில லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவும், கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் 27–ந் தேதி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதுதவிர ஓபலாபுரம் சுரங்க முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த ஆந்திர மாநில அரசும் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி,
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், 2011–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5–ந் தேதி ஐதராபாத்தில் இருந்து பல்லாரிக்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சோதனை செய்தார்கள். பின்னர் ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து ஐதராபாத்திற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து 30 கிலோ தங்க நகைகள், ஹெலிகாப்டரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
40 மாதம் சிறைவாசம்
ஓபலாபுரம் சுரங்க முறைகேடு தவிர ஜனார்த்தனரெட்டி மீது கர்நாடகத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் சுரங்க முறைகேட்டில் இருந்து ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் ஜனார்த்தன ரெட்டி மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஜனார்த்தன ரெட்டி மீது மொத்தம் 7 வழக்குகள்
பதிவாகி இருந்தது.
சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி முதலில் ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன்பிறகு, அவர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு மாற்றப்பட்டார். சுரங்க முறைகேடு வழக்கில் கைதான ஜனார்த்தன ரெட்டி கடந்த 40 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
நிபந்தனையுடன் ஜாமீன்
ஜனார்த்தன ரெட்டி மீது கர்நாடகத்தில் இருந்த 5 வழக்குகளிலும் கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. அதுபோல, நீதிபதிக்கு லஞ்சம் வழங்கிய வழக்கிலும் ஆந்திர மாநில கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. ஆனால் ஓபலாபுரம் கனிம நிறுவனம் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த வழக்கில் மட்டும் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கிடைக்காமல் இருந்தது.
அந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அவரது மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி தலைமையிலான இந்த டிவிஷன் பெஞ்சு அவருக்கு நேற்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ரூ.20 லட்சம் பிணைத்தொகை
மனுதாரருக்கு(ஜனார்த்தனரெட்டிக்கு) நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் ரூ.20 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும். மேலும் ஆந்திர மாநிலம் கடப்பா, அனந்தபூர் மற்றும் பல்லாரி மாவட்டத்திற்கு எக்காரணத்தை கொண்டும் செல்ல கூடாது.
முன் அனுமதியின்றி வெளிநாடு பயணம் கூடாது. பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது. போலீசார் விசாரணைக்கு அழைக்கும் போது உடனடியாக ஆஜராக வேண்டும்.
இவ்வாறு ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இன்று விடுதலை?
40 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தபோதிலும், அவர் உடனடியாக நேற்று விடுதலை ஆகமுடியவில்லை. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய உத்தரவை ஆந்திராவில் உள்ள நாம்பள்ளி கோர்ட்டில் கொடுக்க வேண்டும். பின்னர் விடுதலையாக கோர்ட்டு வழங்கும் அனுமதி உத்தரவை பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் கொண்டு வந்து கொடுத்தால் தான் ஜனார்த்தன ரெட்டி விடுதலையாக முடியும்.
இதுதொடர்பான ஆவணங்களை வழங்க இன்று(புதன்கிழமை) மாலை ஆகிவிடும் என்று தெரிகிறது. இதனால் இன்று மாலை அல்லது நாளை(வியாழக்கிழமை) பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து ஜனார்த்தன ரெட்டி விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஜனார்த்தன ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருப்பதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நேற்று பல்லாரியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். அதுபோல, பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை அருகிலும் ஜனார்த்தன ரெட்டி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதற்கு பா.ஜனதா தேசிய துணை தலைவர் எடியூரப்பா, பா.ஜனதாவினர் மற்றும் ஜனார்த்தன ரெட்டியின் நண்பரும், முன்னாள் மந்திரியுமான ஸ்ரீராமுலு ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment