வங்கி வாகனத்தை மறித்து ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று பணப்பெட்டியுடன் வந்தது. அதில் டிரைவர் உள்பட 4 ஊழியர்கள் இருந்தனர். லோயர்பரேல் பகுதியில் வந்தபோது, டிரைவர் தவிர மற்ற 3 பேரும்
தேநீர் குடிக்க இறங்கினர். தேநீர் குடித்துவிட்டு வாகனத்தில் ஏறிய பின்னர், 2 பேர் மயக்கம் அடைந்தனர். ஆலம் என்ற ஊழியர் மட்டும் தெளிவாக இருந்தார். இந்த தருணத்தில், ஒரு கார் ஒன்று அங்கு வந்து வங்கி வாகனத்தை வழிமறித்தது. இதையடுத்து, டிரைவர் வாகனத்தை நிறுத்தினார்.
அப்போது அந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர், ஊழியர் ஆலமின் உதவியுடன் வங்கி வாகனத்தில் இருந்த ரூ.2 கோடியை கொள்ளையடித்து சென்றனர். தடுக்க வந்த டிரைவரையும் பயங்கரமாக தாக்கினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த டிரைவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, வங்கி ஊழியர் ஆலம் உள்ளிட்ட கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து கிரைம் பிராஞ்சு அதிகாரிகள் கூறுகையில், நான்கு பேரை நாங்கள் சுற்றி வளைத்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை சம்பவத்தை பிடிபட்ட நான்கு பேருடன் இணைந்து மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்” என தெரிவித்தார்
0 கருத்துகள்:
Post a Comment