6 ஆண்டு முட்டுக்கட்டை நீங்கும் வகையில் சிவில் அணுசக்தி உடன்பாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
6 ஆண்டு இழுபறி
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சிவில் அணுசக்தி உடன்பாடு, 2005–ம் ஆண்டு, ஜூலை 18–ந் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்சுக்கும் இடையே வாஷிங்டனில் கையெழுத்தானது.
கடைசியாக இதை அமல்படுத்துவது தொடர்பாக, வாஷிங்டனில் 2008–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10–ந் தேதி அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜிக்கும், அமெரிக்க வெளியுறவு மந்திரியாக இருந்த கண்டலிசா ரைசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் சிவில் அணுசக்தி உடன்பாடு அமலுக்கு வராமல் 6 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்தது.
நீங்கியது முட்டுக்கட்டை
இந்த நிலையில், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் இதுகுறித்து கடந்த 25–ந் தேதி, டெல்லி ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து, ‘சிவில் அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்துவதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது; 6 ஆண்டு காலமாக இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கியது’ என தகவல்கள் வெளியாகின. இதை இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களிடம் உறுதி செய்தனர். ஆனால் இது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
காங்கிரஸ் முடிவு
இந்த நிலையில், பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக அடுத்த மாதம் 23–ந் தேதி கூடுகிறது. அப்போது, இந்த சிவில் அணுசக்தி உடன்பாடு விவகாரத்தை கையில் எடுக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இது பற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆனந்த் சர்மா கூறியதாவது:–
சிவில் அணுசக்தி உடன்பாட்டை வணிகரீதியில் அமல்படுத்துவதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட உடன்பாடு குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். (விபத்து ஏற்படும்பட்சத்தில்) பொறுப்பு ஏற்பது குறித்தும், நிதி இழப்பீடு வழங்குதல் பற்றியும் கூறப்பட வேண்டும். உடன்பாட்டின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்த முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை.
பகிர்ந்து கொள்ள வேண்டும்
இதுவரை அதை அவர்கள் (மத்திய அரசு) தெளிவற்றதாக வைத்துள்ளனர். அரசு அதுகுறித்த விவரங்களை பகிர்ந்துகொள்ளவில்லை. அவற்றை பாராளுமன்றத்தின் முன் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
சிவில் அணுசக்தி என்பது உடன்பாடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டமாக இருக்கிற வரையில், எங்கள் கட்சி எதிர்க்காது.இவ்வாறு அவர் கூறினார்.
இரு சபைகளிலும்...
இந்த விவகாரத்தை காங்கிரஸ், பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் எழுப்பும் என பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘இந்த விவகாரம், பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின்மீது பிப்ரவரி 24, 25 தேதிகளில் நடக்கிற விவாதத்தின்போது எழுப்பப்படும்’’ என்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், ‘‘மோடி அரசு அளித்துள்ள வாக்குறுதிகள், ஏற்கனவே கையெழுத்தான சிவில் அணுசக்தி உடன்பாட்டில் திருத்தங்கள் செய்ய வைக்குமா, நமது நிலைப்பாட்டுக்கு
ஏற்றவகையில் அமைந்துள்ளனவா என்பது குறித்து பரிசீலிப்போம். ஒபாமா வருகை பற்றி பாராளுமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை தாக்கல் செய்வது பிரதமர் நரேந்திர மோடியா, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜா என்று பார்ப்போம். என்ன திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முற்படுவோம் என கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment