திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சரிதா நாயரை விசாரணை கைதி கட்டிப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சரிதா நாயர்
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மின்தகடு மோசடி வழக்கில் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். மேலும், தனியார் கட்டிட நிபுணர் டி.சி.மேத்யூ என்பவரிடம் கடன் வாங்கித்தருவதாக கூறி, ரூ.1 கோடி வரை சரிதா நாயர் மோசடி செய்த வழக்கு மற்றும் சலீம் எம்.கபீர் என்பவரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கு ஆகியவை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இந்த வழக்கு விசாரணைக்காக திருவனந்தபுரம் கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திற்கு சரிதாநாயரை போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது அதே நீதிமன்றத்திற்கு விசாரணை கைதியான சதீஷ் என்பவரையும் போலீசார் அழைத்து வந்திருந்தனர். பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டு இருந்தார்.
கட்டிப்பிடித்த கைதி
நீதிமன்ற அறையில் சரிதா நாயர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறமாக ஓடிவந்த சதீஷ் திடீரென்று சரிதா நாயரை கட்டிப்பிடித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரிதா நாயர் விசாரணை கைதி சதீசை கையோடு பிடித்துச் சென்று நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி விஜயன் பிள்ளை, விசாரணைக்கைதி சதீஷ் மீது வழக்கு தொடர உத்தரவிட்டார். பெண்ணை அவமானம் அடையச்செய்தல், காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களின் அடிப்படையில் சதீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நீதிபதி, போலீசார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்துகள்:
Post a Comment