கொல்கத்தா: ஜப்பான் மாணவியை அடைத்து வைத்து பலமுறை பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்த 23 வயது மாணவி கடந்த நவம்பர் மாதம் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தா வந்தார். கொல்கத்தா ஹோட்டலில் தங்கியிருந்த அவருடன் உள்ளூரைச் சேர்ந்த 3 பேர் ஜப்பான் மொழியில் பேசி நண்பர்களாகினர். அதன் பிறகு அவர்கள் மாணவியை திகா கடலோர ரிசார்டுக்கு அழைத்துச் சென்று அவரிடன் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர்.
அதன் பிறகு அந்த 3 பேரும் மாணவியை பீகாரில் உள்ள கயாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த 3 பேருடன் மேலும் 2 ஆண்கள் சேர்ந்து கொண்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மாணவியை 3 வாரங்கள் அடைத்து வைத்து பலமுறை பலாத்காரம் செய்தனர். இதனால் மாணவியின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து மாணவியை மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி அனுமதித்தனர்.
மாணவி மருத்துவமனையில் இருந்து தப்பி வாரணாசிக்கு சென்றார். அங்கு அவர் சில ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை சந்தித்தார். அவர்கள் உதவியுடன் அவர் கொல்கத்தாவில் உள்ள ஜப்பான் தூதரகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த கொல்கத்தா போலீசார் உள்ளூரைச் சேர்ந்த 3 பேரையும், கயாவில் 2 பேரையும் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment