மராட்டியம் உள்பட 4 மாநிலங்களில் வருகிற 28–ந்தேதிக்குள் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்புகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு மும்பையில் சிவாஜிபார்க் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் வருகிற 28–ந்தேதிக்குள் மராட்டியம் உள்பட 4 மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக்கூடும் என மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை தொடர்பாக புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், லஸ்கர்–இ–தொய்பா, ஜெய்ஷ்–இ–முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட சில அமைப்புகள் தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
4 மாநிலங்கள்
இந்த தீவிரவாத அமைப்புகளின் சார்பில் தாக்குதல் நடத்த அப்துல்லா அல் குரோசி, நாசீர் அலி, ஜாவேத் இக்பால், மொபித் ஜேமன், சம்சேர் ஆகிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளதாக நம்பகத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களை அவர்கள் குறி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மும்பையில் முக்கிய வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையங்கள், தூதரகங்கள், தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் சித்தி விநாயகர் கோவில் உள்பட மும்பையில் உள்ள முக்கிய வழிபாட்டுத்தலங்களில் ஆயுதம் ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
போலீசாரின் விடுமுறை ரத்து
புலனாய்வுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு படையின் உயர் அதிகாரிகள், மும்பை போலீஸ் கமிஷனர் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியை பலப்படுத்துவது குறித்தும், தீவிரவாத தாக்குதல்களை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின் துணை போலீஸ் கமிஷனர் தனஞ்செய் குல்கர்னி நிருபர்களிடம் கூறுகையில், ‘புலனாய்வு துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் பணிபுரியும் அனைத்து போலீசாரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்தில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க பாதுகாப்பு வியூகங்களை வகுத்து வருகிறோம். சந்தேகப்படும் நபர்களை போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது’ என்று கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment