விக்னேஸ்வரன் வலியுறுத்தல் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ள துணைத்தூதுவர் நடராஜ் அவர்களினால் இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என்று நம்புகின்றேன்.
இன்று புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. எனினும் ஏமாற்றுபவர்கள் அதற்கான தண்டனையினை அடைந்தே தீருவார்கள். தாமே ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். சிலரை என்னாளும் ஏமாற்றலாம் பலரை சிலதருணங்களில் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றலாம் எண்ணுவது பழமை. எது எவ்வாறு இருப்பினும் எமது நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளனர். அந்த சூழலை இன மத பாகுபாடு இன்றி மக்கள் யாவரும் சேர்ந்து உருவாக்கியமை எமது நாட்டின் புதிய அத்தியாயத்திற்கு இடமளித்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
தமிழர்களுடன் இணைந்து தான் நாம் எதிர்வரும் காலங்களில் செயற்படுவோம் என்று சிங்கள சகோதர சகோதரிகள் கூறுவது தென்பூட்டுவதாய் அமைந்துள்ளது. அரசியல் தலைவர்கள் எவ்வாறான இருந்தாலும் மக்கள் இடையில் ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இன்று வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டு வருகின்றார்கள்.
இந்த திருத்தச் சட்டமானது இந்திய இலங்கை உடன்பாட்டில் ஏற்படுத்தப்பட்டது
ஆனால் உடன்பாட்டில் இடம்பெற்ற திருகுதாளங்கள் குறித்து எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 13ஐ பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்காகவே இந்தியா 1987 ஆம் ஆண்டு இந்த உடன்பாட்டில் ஈடுபட்டது. இதற்கு ஏற்பட்ட தடங்கல் என்ன என்று பார்த்தால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தினால் எதுவும் கொடுக்கவில்லை என்று சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காக அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா முழு இலங்கைக்கும் மாகாண சபை முறைமையினைக் கொண்டுவந்தார்.
இதனால் வடக்கு , கிழக்கு மக்கள் சார்பாக மத்திய அரசின் கடப்பாடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன் ஏனைய மாகாணங்கள் கேட்காத காணி, பொலிஸ் அதிகாரங்களை ஏன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கேட்கிறீர்கள் என்றும் கேள்வி கேட்கின்றனர். இது தான் அன்று இருந்த அரசினாலும் கடந்த 8 ஆம் திகதி வரை இருந்த அரசினாலும் கேட்கப்பட்டு வந்தது. இனிமேல் எவ்வாறு இருக்குமோ தெரியவில்லை. அதிகாரங்களை பகிர்ந்து தரவேண்டிய கடப்பாடு மத்திய அரசுக்கு இருந்தது.
எனினும் ஏனைய மாகாணங்களை விட இன, மொழி, மதம் ஆகியவற்றால் வேறுபட்டு சிங்கள மொழி தோன்ற முன்பே நாங்கள்
குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்தமையினால் எமக்குத் தான் குறித்த அதிகாரங்களைப் பெறுவதற்கான தேவை இருந்தது. இதனால் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த குறைப்பாடுகள் எம்மை வெகுவாகப் பாதித்தது. பாதிப்பு தொடர்பில் தீர்க்க தரிசனத்துடன் அறிந்து கொண்ட அன்றைய தலைவர்களான சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் மற்றும் இன்றைய தலைவரான சம்பந்தன் போன்றவர்கள் அன்றே உணர்ந்து தாம் கைச்சாத்திட்டதை அன்றைய இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியிடம் தெரிவித்திருந்தார்கள்.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் மாகாண சபைகள் சட்ட மசோதா பற்றியும் அவர்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள். 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாடுகள் தமிழர்களுடைய அரசியல் ஆசைகளையும் , அபிலாசைகளையும் எந்த விதத்திலும் திருப்திப்படுத்தவில்லை என்பதை அவர்கள் அன்றே கூறியிருந்தார்கள். எனினும் இந்திய அரசின் அனுமதியின்றி இலங்கையில் மாகாண சபைகள் முறைமை ஆரம்பிக்கப்பட்டது. அதனையும் அவர்கள் மன்னித்திருந்தார்கள். மேலும் வடக்கு கிழக்கை ஒன்றாக இணைப்பது குறித்த மக்களின் எதிர்பார்ப்பு புறக்கணிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் தற்துணிவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. எனினும் காலப்போக்கில் உயர் நீதிமன்றமும் இணைக்க முடியாது
என்று அறிவித்தது. கிழக்கு மாகாணம் இன்று பெரும்பான்மையினரின் உள்ளீடுகளுக்கு பாரியளவில் முகம் கொடுத்து வருகின்றது. அதேபோல
மாகாணத்தை சிறுப்பித்தமையால் தமிழ் மக்களின் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் தெற்கில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற்றும் நோக்கத்தில் மாவட்டங்களில் இருக்கும் பெரும்பான்மையின அரச அதிபர்களால் இராணுவ உதவியுடன் இக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனாலேயே வடக்கில் உள்ள 5மாவட்டங்களிலும் தமிழர்கள் அரச அதிபர்களாக வரவேண்டும் என்ற வடக்கு மாகாணசபையின் கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. சட்டப்படி வழங்க வேண்டிய அதிகாரங்கள் இந்திய சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதேஅளவிற்கு இங்கும் வழங்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டது. எனினும் அவற்றை செயற்படுத்தாது அவற்றை மாற்றி தம்வசம்
வைத்திருப்பதுபோல மத்திய அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டது. அத்துடன் ஆளுநர் ஜனாதிபதியின் கட்டுப்பாடுகளுக்குள் செயற்பட வேண்டிய இருந்தது.
இதனையே நாம் கடந்த காலங்களில் அனுபவித்து வந்துள்ளோம். இவ்வாறான நிலை ஏற்படும் என்று அன்றைய தலைவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எனினும் எமக்கு தரப்பட்டுள்ள அதிகாரங்கள் இந்திய சட்டத்தில் கூறப்பட்டதுடன் ஒட்டியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டாலும் அவை வெகுவாக குறைந்திருந்தன.13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டனர். அத்துடன் எல்லா வழிகளிலும் நசுக்கப்பட்டும், அச்சத்திற்கு மத்தியிலுமே வாழ்ந்தனர்.
இதனால் வடக்கு கிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தவும் பலகாலம் நிலைத்து நிற்கக் கூடிய நீதியான அதிகார பலம்மிக்க தீர்வைப் பெறவும் இன்னமும் இந்தியாவையே நம்பி இருக்கின்றனர் என்பதை குடியரசு தினத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக கடப்பாடு உங்களுக்கு உண்டு என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். ஒரு வருட காலமாக மாகாண சபையில் இருந்து வருவதால் அதில் உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களைக் கண்டு வருகின்றோம்.
அத்துடன் எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைவானவை . எனினும் அவற்றில் மத்திய அரசு தனக்கு பங்கு போட்டும் கொள்கின்றது. இதற்கு உதாரணமாக திவிநெகுமவைக் கூற முடியும். எமது அதிகாரங்களைத் தூக்கி மத்திய அரசாங்க அலுவலர்களுக்கு வழங்கும் சட்டமாகவே காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து எமது அமைச்சர்கள் இந்திய பிரதமரைச் சந்திக்க ஆவலாக இருக்கின்றார்கள். எமது விடயங்களை அவருக்கு எடுத்துக் கூறி இந்திய, இலங்கை, வடக்கு மாகாண பிரதிநிதிகளின் கலந்துரையாடல் மூலம் உரிய வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பராக் ஒபாமாவும் ஆசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரை இந்தியாவுடன் அமெரிக்கா , ஆபிரிக்கா , ஐரோப்பா ஆகியன ஒன்றிணைந்து செயற்பட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் நம்புகின்றோம். வடக்கு ,கிழக்கு மாகாண மக்கள் இன்னமும் இந்தியாவிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment