கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பின்னணி பாடகர் அங்கித் திவாரி, மும்பையில் நடந்த வருடாந்திர போலீஸ் விழாவில் கலந்து கொண்டு பாடியது பாரதீய ஜனதா கட்சியின் இரட்டை முகத்தை காட்டுகிறது என்று மகாராஷ்டிர பிரதேஷ் காங்கிரஸ் குழு இன்று விமர்சித்துள்ளது.
கற்பழிப்பு குற்றவாளி மந்திரி
இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலின்போது, பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கும்போது உணர்ச்சிகரமாக பேசுவதும் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதை தவிர பாரதீய ஜனதா கட்சியிடம் இருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது என கூறியுள்ளார்.
அவர் மத்தியில் கூட, கற்பழிப்பு குற்றவாளியான மந்திரி (ரசாயன மற்றும் உர துறை மந்திரி நிஹல்சந்த் மேக்வால்) மீது நடவடிக்கை எடுக்க பாரதீய ஜனதா கட்சி மறுத்து விட்டது என்று அவர் கூறியுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் பாரதீய ஜனதாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
பின்னணி பாடகர்
மும்பை அந்தேரியில் போலீசாருக்கான ‘உமங்–2015’ என்ற கேளிக்கை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் நடிகர்கள் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் கற்பழிப்பு வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பின்னணி பாடகர் அங்கித் திவாரியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, விரைவில் வெளியாக இருக்கும் ‘அலோன்’ திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.
முதல்–மந்திரி பங்கேற்பு
அந்தேரியில் நடந்த இந்த விழாவில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கலந்து கொண்டார். ஆனால் அங்கித் திவாரி வருவதற்கு முன்பாகவே அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இளம்பெண்ணுக்கு மிரட்டல்
25 வயதான பாடகர் அங்கித் திவாரி கடந்த ஆண்டு மே மாதம் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை கற்பழித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், அங்கித் திவாரியின் சகோதரர் அங்குர் என்பவர், அந்த பெண்ணை சந்தித்து
மிரட்டல் விடுத்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment