சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்க்கும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நீடிக்க தடை இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அரசு வக்கீலை நீக்ககோரிக்கை
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு உத்தரவு இல்லாமல் ஆஜராகும் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 14-ந்தேதி நீதிபதி அப்துல் நசீர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், அந்த மனுவை தனி நீதிபதி குமாரசாமி அமர்வுக்கு அனுப்பி வைக்கும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். அதோடு இதுபற்றி தலைமை நீதிபதி தகுந்த உத்தரவு பிறப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் விசாரணை
இந்த நிலையில், அரசு தரப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்கக்கோரி க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் பைரா ரெட்டி முன்னிலையில் நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமாரும், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் வக்கீல் மஞ்சுநாத் ராவும், க.அன்பழகன் சார்பில் மூத்த வக்கீல் நாகேசும், பவானிசிங் சார்பில் வக்கீல் செபாஸ்டினும் ஆஜரானார்கள்.
பின்னர் மூத்த வக்கில் நாகேஸ் வாதாடும்போது கூறியதாவது:-
‘‘சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடக்கும்போது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரான பவானிசிங், குற்றவாளிகளுக்கு சாதமாக செயல்பட்டார். மேலும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் விதமாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதற்காக அவருக்கு தனிக்கோர்ட்டு அபராதமும் விதித்தது. அத்துடன் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது நடந்த விவாதத்தின்போது எந்த ஒரு ஆட்சேபனையும் பவானிசிங் தெரிவிக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு அரசு தரப்பு வக்கீலாக பவானிசிங்கை தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தான் நியமித்துள்ளது. அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருவதால், அவர் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு தரப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்க வேண்டும்.’’
இவ்வாறு அவர் வாதாடினார்.
ஏற்க மறுப்பு
பின்னர் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார் வாதாடுகையில், ‘‘கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்டு, அவரது உத்தரவின் பேரில் அரசு தரப்பு வக்கீலை நியமிக்கலாம்’’ என்றார், ஆனால் அவரது வாதத்தை ஏற்க நீதிபதி ஆனந்த் பைரா ரெட்டி மறுத்து விட்டார்.
அதன்பிறகு, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் மஞ்சுநாத் ராவ் மற்றும் பவானிசிங் வக்கீல் செபாஸ்டின் ஆகியோர் வாதாடும்போது ‘‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தான் அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இதில், எந்த ஒரு தவறும் இல்லை,’’ என்றனர்.
அரசு வக்கீலாக நீடிக்கலாம்
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் பைரா ரெட்டி தனது தீர்ப்பில் கூறியதாவது:-
‘‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி சொத்துகுவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தினமும்
நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சட்ட சிக்கல்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும், விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாலும் அரசு தரப்பு வக்கீலாக பவானிசிங் தொடர்ந்து ஆஜராகலாம். அதில், எந்த தடையும் இல்லை.
அரசு தரப்பு வக்கீல் நியமனம் குறித்து மனுதாரருக்கோ (க.அன்பழகன்) அல்லது கர்நாடக அரசுக்கோ ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி உரிய விளக்கங்களை பெற்று கொள்ளலாம்.’’
இவ்வாறு நீதிபதி ஆனந்த் பைரா ரெட்டி கூறினார். இதனை தொடர்ந்து அரசு சிறப்பு வக்கீல் பவானி சிங்கை நீக்ககோரும் க.அன்பழகனின் மனு முடித்து வைத்தனர்.
கட்டிடங்கள் தவறான மதிப்பீடு
இதற்கிடையில், தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று 9-வது நாளாக நடைபெற்ற. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் வாதாடுகையில், ‘‘போயஸ் கார்டனில் உள்ள 2 கட்டிடங்கள், ஐதராபாத்தில் உள்ள கட்டிடத்தின் மதிப்பு ரூ.3.62 கோடி தான். ஆனால் அந்த கட்டிடங்களின் மதிப்பை ரூ.13.64 கோடியாக உயர்த்தி காட்டி உள்ளனர். இது தவறான மதிப்பீடு ஆகும்,’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, தனி நீதிபதி குமாரசாமி விசாரணையை மறுநாள் (அதாவது இன்றைக்கு) ஒத்திவைத்தார்.
0 கருத்துகள்:
Post a Comment