தமிழகத்தில் உள்ள சுமார் 1 லட்சம் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
1 லட்சம் அகதிகள்
இலங்கையில், கடந்த 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மற்றும் படுகொலைகள் தீவிரமடைந்த போது, அங்கிருந்து சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர்.
இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் தலையீட்டினால், இதுவரை சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.
தற்போது சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் அகதிகள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களில் 64 ஆயிரத்து 924 பேர் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கை மந்திரி
இந்த நிலையில் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19-ந் தேதி டெல்லி வந்த இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து இரு நாட்டு உயர் அதிகாரிகளும் 30-ந் தேதி டெல்லியில் சந்தித்து பேசுவது என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசு எதிர்ப்பு
ஆனால் இந்த கூட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம் கடந்த புதன்கிழமை ஒரு கடிதம் எழுதினார். அதில், இலங்கை அரசால் உறுதியான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், எனவே தற்போதைய நிலையில் இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு இருந்தார்.
டெல்லியில் கூட்டம்
என்றாலும் திட்டமிட்டபடி, டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இலங்கை விவகாரங்களுக்கான பொறுப்பை கவனிக்கும் மத்திய இணைச் செயலாளர் சுசித்ரா துரைசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரிகளும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
திருப்பி அனுப்புவது பற்றி ஆலோசனை
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களுடைய தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இதற்காக இரு தரப்பிலும் மேற்கொள்ள வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் அகதிகளை இலங்கையில் சுமுகமான வகையில் மறுகுடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மேலும் சில ஆலோசனை கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment