இந்திய டெல்லி: நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங் அதிரடியாக நீக்கப்பட்டு ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2013ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் சுஜாதாசிங். அப்போதே பிரதமராக இருந்த மன்மோகன்சிங்,
ஜெய்சங்கரைத்தான் வெளியுறவுத் துறை செயலராக நியமிக்க விரும்பினார் என்றும் ஆனால் சோனியாதான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சுஜாதாசிங்கை நியமிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த போது பல்வேறு அமைச்சக செயலாளர்கள் மாற்றப்பட்டனர். சுஜாதாசிங்கும் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் சுஜாதாசிங் பதவியில் தொடர்ந்தார்.
பின்னர் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் நிலையான பேச்சுவார்த்தை திடீரென ரத்தான போதும் சுஜாதாசிங்குக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுஜாதாசிங் பதவியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பி விண்ணப்பித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது யு.பி.எஸ்.சி. தலைவர் பதவியை ஏற்குமாறு மத்திய அரசு தரப்பில் சுஜாதாசிங்கிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை சுஜாதாசிங் நிராகரித்திருக்கிறார். இதனால் மத்திய அரசு அவர் மீது அதிருப்தியடைந்தது.
இதனைத் தொடர்ந்தே சுஜாதாசிங் பணிக் காலத்துக்கு முன்பே அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது சுஜாதாசிங் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்படலாம் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையால் சுஜாதாசிங் மாற்றம் சற்றே ஒத்திபோடப்பட்டிருந்தது. தற்போது ஒபாமா இந்திய பயணத்தை முடித்துவிட்டு புறப்பட்ட மறுநாளே அவர் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்..
மேலும் பிரதமர் மோடி, ஜெய்சங்கருக்கு முக்கிய பணி வழங்குவது குறித்து கடந்த சில மாதங்களாக ஆலோசித்தும்
வந்ததாக தெரிகிறது. பிரதமர் மோடிக்கான வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக அதாவது பிரதமருக்கு மட்டுமேயான வெளியுறவுத் துறை ஆலோசகராக ஜெய்சங்கரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டதாம்..
அப்படி செய்தால் பிரதமர் அலுவலகத்தில்
வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இடையே கருத்து வேறுபாடு எழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன் பின்னர்தான் வெளியுறவுத் துறை செயலாளராக்குவது என்று முடிவு செய்யப்பட்டதாம்.
அதனைத் தொடர்ந்தே சுஜாதாசிங் அதிரடியாக நீக்கப்பட்டு தற்போது ஜெய்சங்கரை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.
இதனிடையே சுஜாதா சிங்கை நீக்கிவிட்டு, ஜெய்சங்கரை வௌியுறவுத்துறை செயலராக நியமித்ததை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி விதிமுறைகளை மீறி தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டு ஏ.பி.வெங்கடேஸ்வரனை பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி அதிரடியாக வெளியுறவுத் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதே போன்ற சர்ச்சை வெடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment