டெல்லியைச் சேர்ந்த தெகல்கா நிறுவனம் இணையவழி செய்திகள் மற்றும் வார இதழ்களை நடத்தி வருகிறது. இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான தருண் தேஜ்பால் மீது அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார்.
கோவாவில் தெகல்கா நடத்திய நிகழ்ச்சி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் கலந்து கொள்ள லிஃப்டில் சென்றபோது தருண் தேஜ்பால் பெண் நிருபரை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது.இதையடுத்து தருண் தேஜ்பால் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். இதற்கிடையே தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் பாலியல் பலாத்காரம், மானபங்கம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு கோவா சிறையில் அடைக்கப்பட்ட தருண் தேஜ்பால் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தனது கட்சிக்காரரான தேஜ்பாலுக்கு அரசுதரப்பு வழக்கறிஞர்கள் இன்னும் வழங்காமல் உள்ளனர்.
ஆவணங்களை அவர்கள் வழங்கவும், அந்த ஆவணங்களை படித்துப் பார்த்து பிரதிவாதத்துக்கு தயாராகும் வரையில் கோவா கோர்ட்டில் நடைபெற்றுவரும் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தருண் தேஜ்பாலின் சார்பில் ஆஜராகும் பிரபல மூத்த வக்கீல் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் எச்.எல். டட்டு மற்றும் ஏ.கே.சிக்ரி அடங்கிய பெஞ்சு கீழ் கோர்ட் விசாரணைக்கு மூன்று வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடை காலத்துக்கு பிறகு கையில் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் வாதாடி, வழக்கை விரைவாக முடிக்க முன்வர வேண்டும் என கபில் சிபலுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்
0 கருத்துகள்:
Post a Comment