இந்திரனை போற்றும் போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு “போகி’ என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள்
பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை “போகி’யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, “பழையன கழிதலும்,
புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை,
தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது.
தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை,
பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது.
மார்கழி மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும்.
போகிப் பண்டிகை
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.
முன்னோர்களுக்கு பூஜை
காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.
பழையன கழிதல்
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது.
தேவையில்லாத குப்பை
போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.
பித்ரு பூஜை
போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.
பறை கொட்டி மகிழ்ச்சி
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
புகையில்லா போகி
இப்போதெல்லாம் போகியன்று “டயர்’களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோய் ஏற்படுகிறது.
மாசற்ற போகி
எனவே போகி பண்டிகை அன்று நமக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் பழைய டயர்கள் மற்றும் பயன்படாத பழைய பொருட்களை எரிக்காமல் அவற்றை தேவையானவர்களுக்கும்
இல்லாதவர்களுக்கும் கொடுத்து உதவலாம். இதன் மூலம் புகையில்லாத மாசற்ற போகி பண்டிகையை கொண்டாடி சுற்று சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகையில்லாத போகி கொண்டாடுவோம்… சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!
0 கருத்துகள்:
Post a Comment