மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர் பைந்தமிழ்செல்வன் கூறினார்.
பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் பைந்தமிழ்செல்வன் நேற்று மேட்டூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 121.5 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 36 ஆயிரத்து 279 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 304 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஜேடர்பாளையம் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாகவும், முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாகவும், கட்டளை வாய்க்காலுக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்து உள்ளது.
முக்கொம்பு அணையில் இருந்து காவிரிக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் செல்லும் தண்ணீர் கல்லணை சென்றடைகிறது. கல்லணையில் இருந்து ஜெ கால்வாய்க்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், வெண்ணாறுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதமும், கொள்ளிடத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.
கொள்ளிடத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கீழ் அணைக்கும், கீழ் அணையில் இருந்து வடவாரி கால்வாய்க்கும் திறந்து விடப்படும் தண்ணீர் வீராணம் ஏரியை சென்றடையும். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. நீர்வரத்து குறையும் பொழுது அதற்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
0 கருத்துகள்:
Post a Comment