Search This Blog n

07 August 2013

சோனியாவுடன் ஆந்திர அமைச்சர்கள் சந்திப்பு

  
தெலங்கானா தொடர்பாக ஆந்திரப் பகுதிகளில் நிலவும் அச்சம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜு, சிரஞ்சீவி, பனபாக லட்சுமி உள்ளிட்டோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
 
 ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிராக, ராயலசீமா மற்றும் சீமாந்திரா பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தலைநகராக ஹைதராபாத் இருப்பதை விட்டுக் கொடுக்க இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்கள், தெலங்கானா மாநிலம் உருவானால் ஹைதாராபாதில் உள்ள தங்கள் சொத்துகளின் கதி என்னவாகும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

 இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சீமாந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான பல்லம் ராஜு, சிரஞ்சீவி, பனபாக லட்சுமி, புரந்தேஸ்வரி, கிருபாராணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

 அப்போது மாநிலம் பிரிக்கப்படுவது தொடர்பான தங்கள் மனக்குறைகளை சோனியாவிடம் அவர்கள் எடுத்துக் கூறினர். மேலும், தெலுங்கு மொழி பேசும் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக ஹைதராபாத் தொடர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு, தங்களின் குறைகளைக் கவனிக்க 3 மூத்த தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று சோனியா காந்தி உறுதி அளித்தார்.

 இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிரஞ்சீவி, ""ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த மக்களின் குறைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று சோனியா எங்களிடம் உறுதியளித்தார். ஆந்திரம், தெலங்கானா என்ற இரு பகுதிகளையும் சேர்ந்த மக்களின் நலன்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்துக் கூறினோம்'' என்றார்.

 போராட்டம் தொடர்கிறது

 ஒன்றுபட்ட ஆந்திரத்தை வலியுறுத்தி கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஏழாவது நாளாக போராட்டம் நடைபெற்றது.

 ஆந்திரத்தின் சில பகுதிகளை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுசெய்துள்ளது. இதை எதிர்த்து கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் கடந்த 6 நாள்களுக்கு முன்பு தொடங்கிய போராட்டம் செவ்வாய்க்கிழமை ஏழாவது நாளாக நீடித்தது.

 ஒன்றுபட்ட ஆந்திரத்தை ஆதரிக்கும் பல்வேறு அமைப்பினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணி நடத்தினர். அப்போது ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.அனந்தபுரியில் பயணிகள் ரயிலை போராட்டக்காரர்கள் நிறுத்தினர். நகரில் மோட்டார் சைக்கிள் பேரணியும் நடத்தினர். தர்மாவரம், பேனுகொண்டா நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹைதராபாதில் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்
 

0 கருத்துகள்:

Post a Comment