சீனாவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான லடாக்கில் பறக்கும் தட்டு போன்ற பொருள் மீண்டும் பறந்ததை பார்த்ததாக, இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.
சீனாவின் எல்லையை ஒட்டிய உயர்ந்த மலைப் பிரதேசமான லடாக்கின் லகான் ஹேல் பகுதியில், கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு போன்ற பொருள் பறந்ததை தாங்கள் பார்த்ததாகவும், அது சுமார் 4 மணி நேரம் பறந்ததாகவும் இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
ஆனால், பறந்த பொருள் விமானமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தை அடுத்து, சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில மாதங்களில் சீனாவின் எல்லையை ஒட்டிய லடாக் பகுதியில் இதுபோன்ற அடையாளம் தெரியாத பொருள் பல தடவை பறந்ததாக, அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் தகவல் அளித்தனர். அப்போதும் அது விமானமா என்பது குறித்து அவர்களால் யூகிக்க முடியவில்லை.
ஆனால், இதுகுறித்து ஆய்வு செய்த இந்தியாவின் உயரிய அறிவியல் ஆய்வு நிறுவனமோ, லடாக் போன்ற உயர்ந்த மலை. மெல்லிய காற்று மண்டலப் பகுதியில் வியாழன், வெள்ளி கோள்கள் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இதை ராணுவ வீரர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறின.
இந்த நிகழ்வு குறித்து நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, லடாக் பகுதியில் அடையாளம் தெரியாத பொருள் பறந்ததாக அங்குள்ள ராணுவ வீரர்கள் தகவல் தந்தது உண்மை. ஆனால், அது சீனாவின் ஊடுருவலா என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்
0 கருத்துகள்:
Post a Comment