உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 16,17 தேதிகளில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டது.
அப்போது புனித யாத்திரை வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு பின்னர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டனர்.
இதில் காணாமற்போனவர்களைப் பற்றிய விபரங்களும் தயாரிக்கப்பட்டன. அதில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 300 பேரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இவர்கள் ருத்ரபிரயாக், சமோலி, உத்தரகாசி மாவட்டங்களில் காணாமற்போனதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை காணாமற்போனவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தின் அதிகாரி அஜய் பிரத்யோக் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 5,100 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக இவர் கூறியுள்ளார். வெளிநாட்டவர்களில் 100 பேர் நேபாள் நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் எனவும், மற்ற நாடுகளின் குடிமக்கள் குறித்த எண்ணிக்கை இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகளில் இருந்தும் தங்களுக்கு காணாமற்போனவர்களைப் பற்றிய விசாரணைகள் வந்துகொண்டிருப்பதாகவும் ஆனால் அதில் பல விபரங்கள் உறுதி செய்யப்படாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சமயத்தில் பிற நாடுகளில் இருந்து இந்தியா வந்திருந்து திரும்ப வராமல் போனவர்கள் பட்டியல் தங்களுக்கு கிடைத்த பின்னரே, இது குறித்து தகுந்த விபரங்கள் அளிக்க இயலும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் பணிபுரியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment