புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இருக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை நடத்திக் கூட்டிப்போகாமல் வீல் சேரில் உட்காரவைத்து, ஆம்புலன்ஸில் கொண்டு சென்றிருக்கலாமே? என குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அக்கறையுடன் கேட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்ட மசோதா மீது நேற்று இரவு வரை காரசாரமான விவாதம் நடைபெற்றது. 8 மணிக்கு மேல், மசோதாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, 8.15 மணி அளவில், சபையில் இருந்த சோனியா காந்திக்கு திடீரென்று நெஞ்சு வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதனையடுத்து மத்திய அமைச்சர் குமாரி செல்ஜாவின் தோள் மீது கைபோட்டபடி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோனியா, மகன் ராகுலுடன் காரில் ஏறி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சோனியா அனுமதிக்கப்பட்டார். டாக்டர் குழுவினர் சோனியாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சோனியாவின் உடல் நிலை சீரானதையடுத்து இன்று அதிகாலை அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் சோனியா கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, "சோனியாஜியின் உடல் நலத்தை கருத்தில்கொண்டு, அவரை நல்ல வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸில் கொண்டு சென்றிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் வீல் சேர்கள், முதலுதவி படுக்கைகள் அவசர தேவைக்கு இருந்திருக்க வேண்டும். அதனை பயன்படுத்தி அவரை கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ," மருத்துவர்கள்தான் சோனியா உடல்நிலை குறித்து சரியாகக் கணிக்க முடியும். அவர் விரைவில் குணமடைய அவர் வாழ்த்துகிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment