மேலும் சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
சிறப்புத் தீர்மான விவரம்: தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினமாக கொண்டாட ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் பிறந்தநாளின் போது மரம், செடி நடும் பணிகள் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகளின்படி, மாநகராட்சி
எல்லைக்குள்பட்ட 318 கி.மீ. நீர்வழித்தடங்களின் இருகரைகளின் 639 கி.மீ. நீளத்துக்கும், குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளிலும் 6.5 லட்சம் பனை மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்கள் தவிர பொதுமக்கள் வீடுகளிலும் பனை மரங்கள் வளர்க்கும் வகையில் 20 லட்சம் பனை கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6.5 லட்சம் பனை மரக் கன்றுகள் நடப்படும். இந்தப் பணியை தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளும்.
மேலும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் சிவப்பு சந்தனமரம் எனப்படும் செம்மரக் கன்றுகள் வழங்கப்படும். இதுபோன்று 6.5 லட்சம் மரக் கன்றுகள் வழங்கப்படும் வீடற்றவர்கள் பொது இடங்கள், சாலைகளில் மரக்கன்று நட்டு பராமரித்து, மரத்தின் பயனை பராமரித்தவரே பெறும் வகையில் விதிகள் வகுக்கப்படும். செம்மரக் கன்றுகள் வேண்டுவோர் மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒரு பப்பாளிக் கன்று வீதம் 6.5 லட்சம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 6.5 லட்சம் நொச்சி செடிகள் இந்தாண்டுக்குள் நடப்படும். அடுத்தாண்டு கூடுதலாக 6.6 லட்சம் நொச்சி செடிகள் நடப்படும்.
ஒரு நாட்டில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வை எனும் வனப்பகுதி இருக்கவேண்டும். ஆனால் சென்னையில் 5.5 சதவீதம் பரப்பில் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. இதனை இந்தாண்டுக்குள் 11 சதவீதமாக உயர்த்துவது என்ற இலக்கு நிறைவேற்றப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சென்னையின் பசுமைப் போர்வை 25 சதவீதத்துக்கு மேல் என்ற இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள பணியாளர்கள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment