காட்டு யானைகள் அட்டகாசத்தால், அமைதியை இழந்து, அச்சத்தோடு வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள நகரங்கள், கிராமங்களில், காட்டு யானைகள் அட்டகாசத்தால், மக்கள் பாதிப்படைந்து, துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அப்பகுதிகளில் மக்கள் வெள்ளை உடையோடு நடமாடினால் யானைகளால் ஆபத்து ஏற்படும் என்று வனத்துறை எச்சரிக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து செய்யும் அட்டகாசத்தால் கரும்பு, வாழை, நெல், கம்பு மற்றும் சோளம் ஆகிய பயிர்கள் சேதம் அடைவதுடன், அதை தடுக்க முயற்சிக்கும் விவசாயிகள் தாக்கப்படுவதும், அதனால் உயிரிழப்பு, பொருள் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டாக இச்சம்பவம் தொடர்கிறது.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், 40 கிராமங்களில் கடந்த 10 நாட்களாக, நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்களை யானைகள் நாசம் செய்துள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரிகள், யானைகளை விரட்டுவோம் என்று கூறி வந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தை விட்டு அவை விரட்டப்படுவதாக தெரியவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட வனப்பகுதிகள் ஒன்றிணைந்து இருப்பதால், வனத்துறையினரும் இணைந்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் யானைகளால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை விரட்டுவதுடன், அதனால், இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அமைதியை இழந்து, அச்சத்தோடு வாழும் மக்களின், நிம்மதியான வாழ்விற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment