திருப்பதி இடம் பெற்றுள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல், இரண்டு நாட்களுக்கு முழு அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. எனவே, இந்த நாட்களில், பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம் என, தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழுவினர் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, பொது வேலை நிறுத்தம், இரு தினங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர மாநிலம் முழுவதும், பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல் வரும், 31ம் தேதி வரை, அனைத்து தனியார் வாகனங்களுக்கும் தடை விதித்து போராட்டம் நடைபெறும்' என, ஐ.என்.டி.யு.சி., நேற்று முன்தினம் அறிவித்தது.இதையறிந்த திருமலை தேவஸ்தானம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதன் பின், திருமலையில், பக்தர்கள் வரும் வாகனங்களுக்கு மட்டும், போராட்டக்காரர்கள் அனுமதியளித்தனர். இந்நிலையில், நேற்று, இந்தப் போராட்டம், இரு தினங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக, போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.இதன்படி, ரயில் மற்றும் விமானம் மூலம் வரும் திருப்பதி பக்தர்கள், திருப்பதி ரயில் நிலையம் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து, குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும், தேவஸ்தான இலவச பேருந்துகளில் அலிபிரியை அடையலாம்.அதே போன்று, சந்திரகிரியில் இருந்து, அலிபிரி வரையிலும், தேவஸ்தான இலவச பேருந்துகள் இயக்குவதற்கு, போராட்டக்காரர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இதுகுறித்து, போராட்டக்காரர்கள் கூறியதாவது:திருப்பதி தேவஸ்தான இலவச பேருந்து தவிர, பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்தால், திருப்பதியில் நுழைய விடமாட்டோம். சித்தூர் மாவட்டத்தில், சைக்கிளுக்குக் கூட அனுமதியில்லை.இந்தப் போராட்டத்தில், அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பெட்ரோல் "பங்க்'குகள், வங்கிகள், பால் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் கலந்து கொள்கின்றனர். எனவே, பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம்.இவ்வாறு, போராட்டக்காரர்கள் கூறினர்
0 கருத்துகள்:
Post a Comment