இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது இந்திய பிரதிநிதியோ யாரும் கலந்துகொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதிலும் நேற்று பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பா.ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.டி.ராகவன், மீனவர் அணி மாநில தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது எல்.முருகன் பேசும்போது, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச தைரியமாக இந்தியா வந்து செல்கிறான். இலங்கை வெளியுறவு துறை அமைச்சரும் இந்தியாவுக்கே வந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறான். இதையெல்லாம் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது, மீறினால் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும். என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், பிரகாஷ், காளிதாஸ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்:
Post a Comment