ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் மீது மத்திய அரசு முன்மொழிந்த சஸ்பெண்ட் நடவடிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
சில உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் மேஜையில் இருந்த மைக்கை இழுத்த போது அது கீழே விழுந்தது. இந்த களேபரத்தால் மக்களவை வியாழக்கிழமை நண்பகலுக்குப் பிறகு நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
நிலக்கரிச் சுரங்கம், தெலங்கானா: மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் வியாழக்கிழமை காலை தொடங்கியது. அப்போது "நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போனது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பி அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர்.
அதேவேளையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் சிலர், தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து, அமளி நீடித்ததால் கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை அலுவல் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும் நிலக்கரிச் சுரங்கக் ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போனது குறித்து அமளி ஏற்பட்டது.
சஸ்பெண்ட் தீர்மான நடவடிக்கை: இதற்கிடையே கமல் நாத், "கடந்த சில நாள்களாக ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி, வி. அருண் குமார், ஸ்ரீநிவாஸ் ரெட்டி, அனந்த் குமார் ரெட்டி, ஹர்ஷா குமார், ஆர்.எஸ். ராவ் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்கள், எம். வேணுகோபால் ரெட்டி, என். சிவபிரசாத், கே. நாராயண ராவ், கிரிஷ்டப்ப நிம்மாலா ஆகிய தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் தெலங்கானா விவகாரத்தை எழுப்பி அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.
அவர்களை கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்' என்றார்.
இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், "இத்தீர்மானத்தை அனுமதிக்க மாட்டோம். தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை பாஜக ஆதரிக்கிறது. ஆனால், தனி மாநிலத்தை உருவாக்க ஆளும் காங்கிரஸ் கூட்டணி நடந்து கொண்ட விதம் மிகவும் வருத்தம் அளிக்கிறது' என்றார்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: சுஷ்மாவுக்கு ஆதரவாக அவைக்குள் இருந்த காங்கிரஸ் கூட்டணி நீங்கலான அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினார். இதேபோல, கமல் நாத் வாசித்த தீர்மான வரிகளில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் என். சிவபிரசாத் மையப் பகுதியில் கடுமையாகக் கூச்சலிட்டார். அப்போது மக்களவைத் தலைவர் மேஜையில் இருந்த மைக்கை இழுக்கும் முயற்சியில் வேணுகோபால் ரெட்டி ஈடுபட்டார்.
மைக் உடைப்பு: கமல்நாத் வாசித்த சஸ்பெண்ட் நடவடிக்கை தீர்மானத்தை நிறைவேற்றும் நடைமுறைகளை மக்களவைத் தலைவர் மேற்கொள்ள முயன்றார். அப்போது சில காங்கிரஸ் உறுப்பினர்கள் (தீர்மான வரியில் இடம் பெற்றிருந்தவர்கள்), தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு மீரா குமார் மேஜையில் இருந்த மைக்கை இழுக்க முற்பட்டனர். அவர்களை அவை ஊழியர்கள் தடுத்தனர். இந்நிலையில், மைக்கின் ஒரு பகுதி கீழே விழுந்தது. இதைத் தொடர்ந்து, கடும் அமளி நீடித்ததால் மக்களவை அலுவலை நண்பகல் 12.45 மணி வரை மீரா குமார் ஒத்திவைத்தார்.
பிறகு மூத்த உறுப்பினர் பிரான்சிஸ்கோ சர்தினா தலைமையில் அவை கூடியதும் உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் தீர்மான நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, அவை நடவடிக்கை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது
0 கருத்துகள்:
Post a Comment