தமிழ்நாட்டில் மதுவை குடிக்கவைத்து கல்லூரி மாணவர்கள் 8 பேர் ராகிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகள் பலர் பேருந்திற்காக காத்திருந்தபோது அங்கு 8 மாணவர்கள் மயங்கி நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து 108 அவசர ஊர்திக்கு சிலர் தகவல் கொடுக்க விரைந்து வந்த அவசர ஊர்தியில் இருந்தவர்கள் மாணவர்களைப் பரிசோதித்துப் பார்த்தனர்.
அப்போது 8 பேரும் அதிக அளவில் மது அருந்தியதால் மயங்கிக் கிடப்பதாக தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து 8 பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்பு ஒரு மாணவருக்கு தெளிவு வந்தபின் அவரிடம் விசாரித்ததில். தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில்தான் நாங்கள் படிக்கிறோம்.
இந்த கல்லூரியில் சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களான எங்களை அழைத்து ஓரு அறையில் அடைத்து, எங்களிடம் இருந்த பணத்தை மிரட்டி பெற்றுக் கொண்டனர்.
பின்பு டாஸ்மாக் பாரில் மதுபானங்கள் வாங்கி வந்தனர். சனிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை எங்களை மது அருந்த சொல்லி ராக்கிங் செய்தனர்.
மாலையில் வீடு திரும்புவதற்காக எழுந்தபோது மதுபோதையில் எங்களால் எழுந்திருக்க முடியவில்லை. பின்னர் சீனியர் மாணவர்கள் எங்களை கல்லூரி பேருந்தில் ஏற்றி அனுப்பினர்.
மேலும் நாங்கள் தருமபுரி பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்தது கூட எங்களுக்கு தெரியாது என்றும் நாங்கள் எப்படி மருத்துவமனைக்கு வந்தோம் என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகமும், பொலிசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment