ஹஜ் குழுவுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் உலமா ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது, மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயாக உயர்த்தியது, வக்பு வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மானியத்தொகையை 1 கோடி ரூபாயாக உயர்த்தியது, நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்காக ஒட்டு மொத்தமாக ரூ.3 கோடி நிதி உதவி வழங்கியது, ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை ரூ.20 லட்சம் உயர்த்தியது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆதரவற்ற முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்கள் சுயமாக சிறு தொழில்கள் செய்வதற்காக, விலையில்லா தையல் எந்திரங்கள், மாவரைக்கும் இயந்திரங்கள், மருத்துவ உதவித்தொகை போன்றவற்றை வழங்குவதற்கு ஏதுவாக, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் நன்கொடை திரட்டப்படுகிறது. அந்த நன்கொடைக்கு ஈடாக அரசால் 1:1 என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த இணை மானியத்தொகையை, 1.4.12 முதல் 1:2 விகிதத்தில் இரு மடங்காக உயர்த்தியும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்படும் மானியத்தொகையின் உச்ச வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியும், முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், காஞ்சீபுரம், விழுப்புரம், அரியலூர், தேனி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திருவாரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களுக்கு 1.4.12 தேதிக்கு முன்னர் அந்த சங்கங்கள் வசூலித்த நன்கொடைக்கு 1:1 என்ற விகிதாச்சார அடிப்படையிலும், 1.4.12 தேதிக்கு பின்னர் வசூலிக்கப்பட்ட தொகைக்கு 1:2 என்ற விகிதாச்சாரத்திலும் இணை மானியம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கென 49 லட்சத்து 68 ஆயிரத்து 347 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்லும் பயணிகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு மெக்கா சென்று பாதுகாப்பாக திரும்புவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட குழுதான் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு. இந்தக்குழு தனது பணிகளை செவ்வனே ஆற்றுவதற்காக, அரசால் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மூன்றாம் முறையாக தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன், சிறுபான்மையின மக்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஹஜ் புனித யாத்திரை சிறப்புற அமைவதற்காக இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தினை ரூ10 லட்சத்திலிருந்து ரூ20 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
சிறுபான்மையின மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் மானியத்தை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment