விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் பாகங்களானது வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்து சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன்(22). பெற்றோரை இழந்த இவரை பாட்டி மேச்சேரியம்மா வளர்த்தார்.
திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குபேந்திரன் கடந்த 24ம் திகதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இதனால் தீவிர சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குபேந்திரனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்களை தானம் செய்ய அவரது சித்தப்பா நடராஜ் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குபேந்திரனின் இதயம் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனைக்கும், நுரையீரலை சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
உடல் உறுப்புகள் கொண்டு செல்ல வேலூர் மாவட்ட பொலிசாரின் உதவி கோரப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணியளவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிஎம்சி மருத்துவர் சீதாராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் குபேந்திரனின் உடல் உறுப்புகளை நேற்று காலை 5.30 மணிக்கு பிறகு ஒவ்வொன்றாக அகற்றினர்.
காலை 7.55 மணிக்கு பிரீசரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் பாகங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் 142 கி.மீ வேகத்தில் பொலீரோ ஜீப்பை பொலிஸ் ஒட்டுனர் சரவணன் ஒட்டியுள்ளார்.
97 நிமிடத்தில் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனையில் இதயம் ஒப்படைக்கப்பட்டது. பின்ப அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு நுரையீரல் அனுப்பிவைக்கப்பட்டது.
குபேந்திரனின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் சிஎம்சிக்கு தானமாக பெறப்பட்டது. இதற்காக பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ரோந்து பொலிசார் தீவிரமாக கவனித்து வந்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment