உத்தரகண்டில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பவுரி மாவட்டத்திலும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் அலக்நந்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கேஷோராய் மடமும் தப்பவில்லை. இந்த மடம் 1625-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என பேரிடர் மேலாண்மை அதிகாரி ரவ்நீத் சீமா தெரிவித்தார். ஆற்று வெள்ளத்தில் கேஷோராய் மடம் கொஞ்சம் கொஞ்சமாக அடித்து செல்லப்பட்ட நிலையில் தற்போது அதன் பக்கவாட்டுச் சுவர்கள் மட்டுமே எஞ்சி நிற்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே உத்தர்காசி மாவட்டம் பத்கோடில் அதிகபட்சமாக 106 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக சமோலி மாவட்டம் கமிதாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. ஹரித்துவாரில் கங்கை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
உத்தர்காசியில் உள்ள குணால் கிராமத்தில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஹரித்துவார் மாவட்டத்தில் லக்ஷர் என்ற இடத்தில் கங்கை நதியில் 24 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் அனைவரும் காப்பாற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
Post a Comment