விபத்தில் ஏற்பட்ட தழும்பு காரணமாக தனது எதிர்காலத்தை தொலைத்த நடிகை ஒருவருக்கு தற்போது நஷ்ட ஈடாக ரூ.1.27 கோடி கிடைத்துள்ளது.
அழகிப்போட்டி வெற்றி மூலம் கலை உலகில் அறிமுகமானவர் ரேகா ஜெயின். முதலில் சீரியல்களிலும், பின்பு படிப்படியாக திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
நடித்த முதல் படமான மோ பரி கியே ஹபா மூலம் சிறந்த நடிகை மற்றும் சிறந்த புதுமுக நடிகை என விருதுகளை அள்ளிக் குவித்தார் ரேகா. அடுத்தடுத்து மலையாளப் படத்திலும், விளம்பரங்களிலும் தோன்றி புகழ்களை சம்பாதித்தார்.
இந்நிலையில் 2001ம் ஆண்டு ஒகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற பயங்கரமான விபத்தில் சிக்கினார்.இவர்கள் சென்ற கார் மீது ட்ரக் ஒன்று மோதியதால், சம்பவ இடத்திலேயே அவரது தாயார் பலியானார். அந்த விபத்தின் வடுக்கள் அவரது மனதில் மட்டுமல்ல, முகத்திலும் எதிரொலித்தன.
விபத்தினால் ஏற்பட்ட தழும்புகளால் ஏற்கனவே, ஒப்பந்தமான பட வாய்ப்புகள் கை நழுவின. விபத்தினால் தனது எதிர்காலமே பறிபோனதாக கூறி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார் ரேகா.
மருத்துவ வாரியம் அவருக்கு 30 சதவிகிதம் மட்டுமே ஊனம் என சான்றிதழ் அளித்ததால், சம்பல்பூர் மோட்டார் விபத்து தீர்ப்பாயம் அவருக்கு 23.5 லட்சம் நஷ்டஈடு அளிக்கும்படி காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ரேகாவிற்கு நஷ்ட ஈடாக ரூ.1.27 கோடி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment