Search This Blog n

11 August 2013

குழந்தையின் உடலில் பொஸ்பரஸ் உற்பத்தி? -


 வியர்வை, சிறுநீர், ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு,,,
உடலில் தீப்பிடித்து எரியும் குழந்தையின் வியர்வை, சிறுநீர், ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மரபியல் குறைபாடு பற்றியும் ஆய்வு நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்த தம்பதி கர்ணன் (27), ராஜேஸ்வரி (24). இவர்களுக்கு கடந்த மே மாதம் ராகுல் என்ற மகன் பிறந்தான். திடீரென குழந்தையின் 2 கால்களும் தீப்பிடித்து எரிவதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். அதன்பிறகு 3 நாட்கள் கழித்து மீண்டும் குழந்தையின் உடல் தீப்பிடித்து எரிந்ததால் செய்வதறியாது பெற்றோர் தவித்தனர்.   

இதைத்தொடர்ந்து குழந்தையின் மார்பு பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பினர். அதன்பிறகும் குழந்தையின் தலையில் தீப்பிடித்து எரிந்ததுள்ளது.இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை ராகுலை சேர்த்தனர். குழந்தைகள் நல தலைமை மருத்துவர் நாராயணபாபு தலைமையில் மருத்துவக்குழுவினர் குழந்தையின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
குழந்தையின் நாடி துடிப்பு, இதய துடிப்பு பற்றி அறிய மல்டிபேரா மானிடர் கருவி பொருத்தியுள்ளனர். உடலில் தீப்பிடித்தால் அணைப்பதற்காக அருகில் தண்ணீர் வைத்துள்ளனர். பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் ஜெகன்மோகனும் சிகிச்சை அளித்து வருகிறார். இதுகுறித்து டாக்டர் நாராயணபாபு கூறுகையில், இந்தியாவில் முதன்முறையாக குழந்தை உடலில் திடீரென தீப்பற்றி எரிவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. குழந்தை ராகுல் உடலில் இருந்து வெளியேறும் வாயு, வியர்வையால் தீப்பிடிக்கிறதா என கண்டுபிடிக்க வியர்வை, சிறுநீர், ரத்தம் ஆகியவற்றை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். ஸ்கேன் பரிசோதனையும் செய்துள்ளோம். தற்போது குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது. மருத்துவக்குழுவினர் குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.
குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் கே.ஜெயச்சந்திரன் கூறுகையில், பெட்ரோல், கிரசின் எளிதில் தீப்பற்றக்கூடியது, ஆனால் தானாக எரியாது. தீப்பற்றவைத்தால் தான் எரியும். பொஸ்பரஸ் என்ற மூலகம் மட்டுமே தானாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. ஆதனால் பொஸ்பரஸ் எப்போதும் தண்ணீருக்குள் வைக்கப்படும். குழந்தையின் உடலில் பொஸ்பரஸ் உற்பத்தியாகி வியர்வை மூலம் வெளியாகி தீப்பற்றி எரிகிறதா என ஆராய்ந்து வருகிறோம்.
இதற்கிடையே, ராகுலின் ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை பரிசோதனை செய்து பார்த்தபோது சரியான விகிதத்தில் உள்ளது. குழந்தையின் மூளை, சிறுமூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவையும் சி.டி. ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளன. குழந்தையின் முன்பகுதி மட்டுமே தீப்பிடித்து எரிவதால் மரபியல் குறைபாடு உள்ளதா என்றும் பரிசோதித்து வருகிறோம். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் உடலில் உள்ள தீக்காயங்கள் குணமாகி வருகின்றன என்றார்.

0 கருத்துகள்:

Post a Comment