தமிழ்நாட்டில் எனது ஆட்சியானது சீனப் பழமொழிக்கேற்ப செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை பல்கலைக்கழகத்தின் 155வது பட்டமளிப்பு விழா, 2011, 2012ம் ஆண்டுகளுக்கான துணை பட்டமளிப்புவிழா ஆகிய முப்பெரும் விழா சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கட்டிடத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான கே.ரோசய்யா தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்புவிழா பேருரை நிகழ்த்தினார்.
அவர் நிகழ்த்திய பேருரையில், இந்தியாவில் உள்ள மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகமும் ஒன்று.
மிகச்சிறந்த கல்வி பாரம்பரியம் மிக்க இந்த பல்கலைக்கழகத்தை தொலைநோக்கு சிந்தனையாளர்களும், ஜாம்பவான்களும் சேர்த்து உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு படித்த மாணவர்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
சர் சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் ஆகிய இரு நோபல் பரிசு விஞ்ஞானிகளையும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகிய குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
ஒரு ஆண்டை மனதில் வைத்து சிந்தித்தால் நெல் பயிரிடு. 10 ஆண்டுகளை மனதில் வைத்து சிந்தித்தால் மரக்கன்றுகளை நடு. 100 ஆண்டுகளை மனதில் வைத்து சிந்தித்தால் மக்களுக்கு கல்வி கொடு என்பது சீன பழமொழி. எனது தலைமையிலான அரசு இந்த மூன்றையும் செய்திருக்கிறது.
இப்போதும், அடுத்த 10 ஆண்டுகளிலும், அடுத்தடுத்து பல தலைமுறையினரும் போற்றிப்புகழத்தக்க வகையில் நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்று நான் உறுதிகொண்டுள்ளேன்.
கல்வி நிறுவனங்கள் மூலமாக போதிய எண்ணிக்கையில் உயர்தரமிக்க நிபுணர்களை உருவாக்கி மனித வள ஆற்றலை மேம்படுத்த வேண்டும். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது எனது அரசின் தலையாய நோக்கம் ஆகும்.
சென்னை பல்கலைக்கழக கல்வியில் தமிழகத்தை சர்வதேச மையமாக உருவாக்குவதே லட்சியம்.
அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் உலகத்தரமான கல்வியை வழங்கும் வகையில் நமது கல்வி நிறுவனங்கள் சிறப்பு மையங்களாக உருவாக வேண்டும் என்று நான் சிந்தித்து பார்க்கிறேன்.
உயர்கல்வித்துறையை பொறுத்தமட்டில், ஆராய்ச்சியிலும் சரி, வளர்ச்சி மேம்பாட்டிலும் சரி தமிழ்நாடு 21-ம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ரூ.2 கோடி செலவில் 10 பல்கலைக்கழகங்களில் வீடியோ-கான்பரன்சிங் வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள், ஆங்கிலம், சீனம், ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை படிக்கும் வகையில் 10 பல்கலைக்கழகங்களில் ரூ.1½ கோடி செலவில் மொழி ஆய்வகங்கள், மாணவர்களை தொழில்முனைவோர்களாக்கும் வண்ணம் 10 பல்கலைக்கழகங்களில் ரூ.2 கோடி செலவில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மையங்கள், வெளிநாடுகளை சேர்ந்த புகழ்பெற்ற பேராசிரியர்கள் தங்கள் கல்வி அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வசதியாக ரூ.1 கோடி செலவில் 10 பல்கலைக்கழகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய உலகத்தரத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க 10 பல்கலைக்கழகங்களில் ரூ.10 கோடி செலவில் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவுகள், கிராமப்புற இளைஞர்களின் வேலைத்திறனை அதிகரிக்கவும், அவர்களை வேலைவாய்ப்பு தகுதிமிக்கவர்களாக உருவாக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளில் கிராமப்புற பகுதிகளில் புதிதாக 22 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கிராமப்புறங்களில் தொழில்கல்வியை மேம்படுத்தும் வண்ணம் 10 பாலிடெக்னிக் கல்லூரிகள், 2 பொறியியல் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழகம் உள்பட 6 பல்கலைக்கழகங்களில் வியாபார கூட்டு மையங்கள், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்,சென்னை பல்கலைக்கழகம் உள்பட 8 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப மாற்று மையங்கள், 30 கல்லூரிகளில் மென்திறன் பயிற்சி மையங்கள் போன்ற வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் விலையில்லா மடிக்கணனி என ஏராளமான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி உள்ளது.
விலையில்லா மடிக்கணனி வழங்கும் திட்டம், வெளிநாடுகளில் நமது மாணவர்களை தலைநிமிர வைத்திருக்கிறது.
இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 402 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கி உள்ளோம் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒட்டுமொத்த பார்வைதான் மேற்கண்ட நடவடிக்கைகள். சர்வதேச கல்வி தரத்திற்கு இணையான கல்வியை வழங்கும் வகையில் நமது பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும்.
மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய முக்கிய சாதனங்களாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்குநிகழ்த்தியுள்ளார்
{ புகைபடங்கள், }
0 கருத்துகள்:
Post a Comment