தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் அதிரடி சோதனை செய்ததில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சில அரசு பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
மணிக்கட்டி பொட்டல் அரசுமேல்நிலைப்பள்ளி, இடலாக்குடி அரசு பள்ளி, கொட்டாரம் அரசு பள்ளி ஆகியவற்றில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களிடம் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பள்ளி மாணவர்கள் படிக்கும் நேரத்தில் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் மாணவர்களிடம் செல்போன்கள் உள்ள கைப்பேசிகள் அவற்றில் பயன்படுத்திய மெமரி கார்டுகள், சென்ட் பாட்டில்கள், தனியாக வைத்திருந்த சிம் கார்டுகள், பிரேஸ்லெட், பெரிய பக்கிள்சுடன் கூடிய பெல்டுக்கள், வெளிநாட்டு, மற்றும் கோல்டு வாட்சுகள், போதை பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள், நவீனநாகரீக சீப்புகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதைப்போல் சில மாணவர்களின் முடி அலங்காரம் சினிமா நடிகர்கள் பாணியில் வளர்த்தும், மோசமான தோற்றத்தில் டை அடித்து மாற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுக்கு சி.இ.ஓ. அறிவுரை வழங்கினார். மேலும் படிக்கும் காலகட்டத்தில் இதுபோன்று கவனத்தை திசைதிருப்பி தவறான பாதையில் செல்லவைக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இது குறித்து சி.இ.ஓ. ராதாகிருஷ்ணன் கூறுகையில்,ஒழுக்கமுள்ள பள்ளியை உருவாக்க முதலில் ஆசிரியர்கள் ஒன்றுபட்ட கூட்டு செயல்பாட்டை உருவாக்கவேண்டும். ஆசிரியர்களின் கடமை கற்பித்தலோடு மட்டும் நின்றுவிடக்கூடாது.
ஒழுக்கம் குறைந்த மாணவர்களை திருத்துவதோடு, ஏழ்மையான குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும்.
ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தும்போது அவர்களையும் திருத்தமுடியும் என்ற நம்பிக்கை உருவாகும்.
ஒழுக்கமும், பண்பும் உள்ள மாணவர்கள் வாழ்வின் அனைத்து பருவங்களிலும் மிகச்சிறந்த மனிதர்களாக திகழமுடியும் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
மேலும் ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளும் அவர்களின் நடத்தையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே முக்கியமான பள்ளி பருவத்தில் உபயோகிக்கக்கூடாத பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நல்ல பாதைக்கு அழைத்து செல்லவே இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார்.
பள்ளி மாணவர்களிடம் நடத்திய சோதனையின் போது பல நடிகைகளின் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் அவர்கள் பேண்ட், மற்றும் சட்டைபாக்கெட்டில் வைத்திருந்த யூனிபார்முடன் கூடிய பல மாணவிகளின் புகைப்படத்தை பார்த்து சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களிடம் அறிவுரை கூறியதுடன் அவர்களின் பெயர் விவரங்களை வெளியிடவேண்டாம் என ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
போதை பாக்குகள் வைத்திருந்த மாணவர்களிடம் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து விளக்கப்பட்டது. பள்ளி அருகாமையில் இருக்கும் கடைகளில் போதை பாக்குகள் ரகசியமாக விற்கப்படுகின்றனவா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் பெற்றோர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களிடம் கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது. வாரம் ஒருமுறை திடீரென பள்ளிகளில் சோதனை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment