மலர்ந்திருக்கும் 2013ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கமைய தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிலையான தீர்வு எட்டப்படும். அதற்குத் தேவையான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுவருகின்றோம்."
இவ்வாறு மீன்பிடித்துறை அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன நம்பிக்கை தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ - மூனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பரிந்துரை பிரகாரமும், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கமையவும் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனடிப்படையில் இருதரப்புக்கும் இடையில் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட பேச்சில் அரசின் சார்பாக அமைச்சர்களான நிமல்சிறி பால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், ரண்டசிறி விக்கிரமநாயக்க ஆகியோருடன் சஜின் டி வாஸ் குணவர்த்தன எம்.பியும் கலந்து கொண்டார்.அத்துடன், தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய எம்.பிக்கள், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த இரு தரப்பு பேச்சுக்களையடுத்து அரசு, தமிழ்க் கூட்டமைப்பிடம் இடைக்கால தீர்வுத் திட்ட யோசனையொன்றை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. இதன் பிரகாரம் தமிழ்க் கூட்டமைப்பு அரசிடம் தமது இடைக்காலத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தது. தமிழ்க் கூட்டமைப்பின் இந்த இடைக்காலத் தீர்வுத் திட்டமானது, புலிகளின் கொள்கைளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது எனக் காரணம் கூறி அந்த இடைக்கால யோசனையை அரசு நிராகரித்தது. அத்துடன், தமிழ்க் கூட்டமைப்பு இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் கோரிய எழுத்துமூலமான உத்தரவாதத்தையும் அரசு வழங்க மறுத்தது.
இரு தரப்பு பேச்சுக்களின்போது தமிழ்க் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்து அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அரசு தரப்பு பேச்சுக்குழுவிலிருந்து விலகினார்.
இந்நிலையில் இந்திய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நட்பு ரீதியாக தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பிக்கு விரிசலடைந்திருந்த இனப்பிரச்சினைக்கான பேச்சுகளை மீள ஆரம்பிக்க அழைப்பு விடுத்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனையை முன்வைத்து, அதில் பங்குகொள்வதற்காக தமிழ்க் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்தது. தெரிவுக் குழுவில் தாம் பங்கேற்க வேண்டுமெனில், இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் இரு தரப்பினருக்குமிடையே பேச்சில் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும். இந்த பேச்சுகளின் இணக்கப்பாட்டுடன் எட்டப்படுத் தீர்வைப் பரிசீலிக்கும் இடமாக தெரிவுக்குழு அமைய வேண்டும் என தமிழ்க் கூட்டமைப்பு, தெரிவுக்குழு தொடர்பில் தமது நிலைப்பாட்டை அரசிடம் தெரிவித்தது.
இதற்கு அரசிடமிருந்து சாதகமான பதில் தமிழ்க் கூட்டமைப்புக்கு கிடைக்கவில்லை. அத்துடன், கூட்டமைப்பு முதலில் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும், அதனூடாக பேச்சில் இணக்கப்பாடுகளை எட்டலாம் என அரசு அதன் பிடிவாதப்போக்கை வெளிப்படுத்தியது. இந்நிலையில் இரு தரப்பினரும் தெரிவுக்குழு தொடர்பில் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசும், தமிழ்க் கூட்டமைப்பும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தீர்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டும் என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கவேண்டும் என்ற கருத்து ஆளுந் தரப்பின் சில அமைச்சர்களால் முன்வைக்கப்பட்டது. 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கருத்தினால், ஆளுந்தரப்பின் சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமது கடும் அதிருப்தியினை வெளியிட்டு வந்தனர். சர்வதேசமும் இந்தப் 13ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கு தமது அதிருப்தியை வெளியிட்டது.
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் மலரவிருக்கும் புத்தாண்டிலாவது தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என அமைச்சர் ராஜித்த சேனாரட்ணவிடம் வினவியபோது, அவர் கூறியவை வருமாறு:
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கமைய தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வைக்காண நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.
மலர்ந்திருக்கும் 2013ஆம் ஆண்டு சிறந்ததொரு ஆண்டாகும். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தடையாக இருக்கும் அனைத்து அந்நிய சக்திகளையும் முறியடித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின்மூலம் தீர்வு எட்டப்படும்.
அதற்காக இன, மத பேதங்களைக் கடந்து நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம். 13ஆவது திருத்தச்சட்டத்துக்கமைய சகல அதிகாரங்களும் கிடைக்கப்பெற்ற சமூகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும்
|
0 கருத்துகள்:
Post a Comment