Search This Blog n

28 December 2012

தமிழர்கள் நாய்கள்! திட்டிய இராணுவம்!


தமிழர்களது கவலைகளுக்கு குரல் கொடுக்கும் ததேகூ யை தமிழர்கள் சரியான முறையில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கடந்த யூன் மாதம் அரசு திருமுருகண்டி, முல்லைத்தீவு இரண்டிலும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காணி ஆவணங்களை போரில் இழந்த மக்களது காணிகளைப் பறித்து அதில் இராணுவ முகாம்களை அரசு அமைத்துள்ளது.
நான் வன்னியில் கடமையாற்றிய சமயம் இராணுவம் எப்படி காணி பற்றிய முடிவுகளை (எப்படி இராணுவம் பொதுமக்கள் தொடர்பான காரியங்களில் ஈடுபடுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை!) நடைமுறைப்படுத்தியது என்பதை நான் சாட்சிகள் மூலம் அறிந்து கொண்டேன். இராணுவத்தினர் மீள்குடியமர்ந்த தமிழர்களை நாய்கள் எனத் திட்டினார்கள். உங்களது காணியைக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எனக் கேட்டனர். இதனை ஓரமாக இருந்து கொண்டு அய்.நா.ம.உ. பேரவை (UNHRC) மற்றும் அரசு சார்பற்றி அமைப்புக்கள் வாய்பேசாது பார்த்துக் கொண்டு நின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) மட்டும் உடனே எதிர்ப்புத் தெரிவித்து அந்த மோசமான அநீதியை மற்றவர்களது கவனத்துக்குக் கொண்டு வந்தது. சிறீலங்கா மக்களது சனநாயக உரிமைகளை அச்சுறுத்தும் 18 ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டபோது ததேகூ தமது எண்ணங்களை நாடாளுமன்றத்தில் துணிச்சலோடு பேசினார்கள். அப்போது நீங்கள் புலிகள் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் கீழ்த்தரமான கருத்துக்களைச் சொன்னார்கள்.

தமிழர்களது மனதில் வெற்றிலைச் சின்னம் என்பது வன்முறை மற்றும் இரண்டகம் என்பனவற்றின் குறியீடாக மாறியிருக்கிறது. நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் வேறு எந்த குறியீடும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் உள்ள மக்களை நூறு விழுக்காடு அப்புறப்படுத்தவில்லை. இது வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்துக்கும் பொருந்தும். இந்த பாகுபாட்டோடு அரசு தொடர்பு படுத்தப்பட்ட காரணத்தாலேயே இபிடிபி வன்னியில் தோற்கடிக்கப்பட்டது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஆண்மைபடைத்த வேட்பாளர்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களால் புறந்தள்ளப்பட்டார்கள்.

வட மாகாண மக்களது இடைநடு வருமானம் வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ளது

இருந்தும் ததேகூ வன்னிமக்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுப்பதில் தோல்வி கண்டுள்ளது. காரணம் அரசுதான் பணம் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொடுக்கிறது. இதனால் ததேகூ வன்னிமக்களின் நாடித்துடிப்பைப் பிடித்துப் பார்க்க மறந்து விட்ட மேல்தட்டு கனவான்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பலவீனமான கட்சி என நியாயமற்ற முறையில் பார்க்கப்படுகிறது. ததேகூ உட்பட எல்லா அரசியல்வாதிகளும் அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் வன்னி மக்களது அதிர்ச்சி தரும் வறுமை மற்றும் சமூக சீர்குலைவு பற்றிச் சிறிதளவாவது கவனம் செலுத்தத் தவறி விட்டார்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் உணவுப் பாதுகாப்புப் பற்றி அரசு மேற்கொண்ட ஓர் ஆய்வு (2011) வடமாகாண மக்களது இடைநடு வருமானம் மாதம் உரூபா 1,667 ஆக இருக்கிறது. ஆனால் தேசிய வறுமைக் கோட்டின் வருமானம் 3,534 ஆக இருக்கிறது. மேலும் கிளிநொச்சியில் வாழும் 80 விழுக்காடு மக்கள் தங்களது அடுத்த வேளை உணவு எப்போது, எப்படிக் கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். வன்னி மக்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள் என்பது பற்றி அரசியல்வாதிகள் அக்கறைப்படுவதாக இல்லை. வன்னி வாக்குவேட்டைக்கு உகந்த சண்டைக்களமாக மாற்றப்பட்டுள்ளது. ஏழை ஒருவன் தனது குழந்தை தன் கண் முன்னாலே பட்டினி கிடப்பதைத் பார்த்த பின்னரும் தனது உரிமை பற்றி கவலைப்படுவதே இல்லை என்பது உண்மைதான். இதனால் அது தேசிய சொல்லாடலில் அவனது குரலின் பலத்தை இழக்கச் செய்து விடுகிறது. அது அவனது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

மீள்குடியமர்வின் போது திரும்பி வந்த மக்களை அரசு கைவிட்டு விட்டது. அதன் மூலம் தனது குடிமக்களது உரிமைகளையும் சுதந்திரங்களையும் காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லாது இருந்துவிட்டது. பல நுட்பமான வழிகளில் வடக்கில் வாழும் மக்களைத் தொடர்ந்து அன்னியப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக வெறும் காணிகளில் "இது இராணுவத்துக்குச் சொந்தமானது" என பிரகடனப்படுத்தும் அறிவித்தல் பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது. அல்லது சிங்களத்தில் மட்டும் சனாதிபதி பற்றிய பெரிய விளம்பரத் தட்டிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. நான் வன்னியில் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். அப்போது நான் கேள்விப்பட்டது என்னவென்றால் இந்த அரசு மட்டும் மாணிக்கம் தோட்டத்தில் இருந்து மக்களை வேளையோடு வெளியில் போக விட்டிருந்தால் அல்லது அவர்களை போரினால் சீரழிக்கப்பட்ட காணிகளில் தங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை மீள் கட்டியெழுப்ப உதவியிருந்தால் அவர்கள் சனாதிபதியை அதிகளவு வரவேற்றிருப்பார்கள்.
ஆனால் இந்த மக்களைக் மீள்குடியமர்த்துவதற்கு ஆகும் செலவை அரசு வேறு நாடுகள் பொறுப்பேற்க வழிவிட்டது. அரச சார்பற்ற அமைப்புக்களை அடிப்படை உதவிகளை மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டது. இந்திய அரசு குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கு பல்வேறு பொருளுதவியைச் செய்தது. இந்தியா சிறீலங்கா அரசுக்கு ஊடாக தகர தகடுகள், யூஎன்எச்சிஆர் ஊடாக கருவிகள், இப்போது கிட்டத்தட்ட 40,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்து வருகிறது. வடக்கில் கிழக்கில் உள்ள சமூகங்களை மீள் கட்டியெழுப்புவதில் அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா மற்றும் பல நாடுகள் சிறீலங்காவின் மீள்கட்டமைப்புக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளன.

ஆனால் இது நலமார்ந்ததல்ல. குறிப்பாக இனங்களுக்கு இடையிலான உறவு மற்றும் சமூகங்களின் உள்நாட்டு அடையாளங்களை இது நிராகரித்து விட்டது. உறவு முறைகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் பொறிமுறையை நிராகரித்துவிட்டது.

குடிமக்கள் அடக்குமுறைக்கு முகம் கொடுக்கிறார்கள்

தமிழர்களாகிய நாங்கள் எமது சுதந்திரத்தையும் உரிமைகளையும் ஏதோ அரசு அவற்றைப் பங்கீடு செய்வது போல அரசிடம் இருந்து கேட்கக்கூடாது. எமது சுதந்திரங்களும் உரிமைகளும் எங்களுக்குப் பிறப்பு முதல் இருக்கிறது. அவற்றை அரசின் பரந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் விழுங்கிவிட முடியாது. இது பற்றித் தமிழர்களுக்கு மட்டும் ஒரு நியாயமான குறிக்கோள் இருப்பதாகச் சொல்லமுடியாது. சிறீலங்காவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மனிதர்கள் என்ற முறையில் அவர்களுக்கு இருக்கும் சிறப்புரிமைகள் தொடர்பாக அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

எடுத்துக்காட்டாக, துரித நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக பல சமூகங்கள் சட்டத்துக்கு மாறான இடப்பெயர்வுக்கு உள்ளானார்கள். அல்லது மக்கள் மற்றும் செய்தியாளர்கள் அரசு மற்றும் தங்கள் மேலாளர்களது ஆழமான அய்ய நுண்ணாய்வு காரணமாகத் தங்கள் கருத்துக்களை சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். அதுபோல எங்கள் பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், கோயில்கள், பணியிடங்கள், முக்கியமாக அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்களை எதிர்த்து போராட முடியாமல் இருக்கிறது.

மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமைகள் காரணமாக எமது நாட்டில் "மக்களுக்காக மக்களால்" என்ற மக்களாட்சி இயங்க முடியாமல் இருக்கிறது. ஊழல் அரசியல்வாதிகள் நாட்டின் எதிர்காலத்தைத் தங்களது மனம்போன போக்கில் தீர்மானிக்கிறார்கள். தலைவர்கள் வாக்காளர்களுக்குப் பொறுப்புக் கூறவைப்பதற்குப் பதில் நாங்கள் இன்றுள்ள நடைமுறையை மாற்ற - எமது சனநாயக உரிமையை நிலை நாட்ட ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறோம். அரசியல்வாதிகள் தங்கள் பணப்பெட்டியை நிரப்பத் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

அதனால் நீண்ட வரலாறு படைத்த சிறீலங்காவின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளை மதிக்கத் தவறிவிட்டார்கள். எமது எதிர்காலத்தை மிதிப்பதன் மூலம் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். இலவச கல்வித்திட்டத்தினால் பயனடைந்தபட்டதாரிகள் அவர்களது திறமையை வெகுவாக மதிக்கும் நாடுகளுக்குக் குடிபெயர்கிறார்கள். அவர்கள் சிறீலங்கா போன்று கல்வி மற்றும் திறமைக்குப் பதில் உறவினர்களுக்கு தனிச் சலுகை அளிக்கும் நாட்டில் பிழைத்திருக்க முடியாது. இருந்தும் அரசியல்வாதிகள் ஒரு வணிக நிறுவனத்தின் முக்கிய நிறைவேற்று அதிகாரி போன்று தங்களது இலாபத்திலேயே குறியாக இருக்கிறார்கள்.

போரில் வெற்றிபெற்ற மகிந்த இராசபக்சே ஒற்றுமையுள்ள நாட்டை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கிறார். தமிழர்களுக்கு ஆயுதம் ஏந்திய அல்லது ஆயுதம் ஏந்தாத போராளிகள் தேவையில்லை. தேவை என்னவென்றால் நண்பர்களும் அரசியல்வாதிகளுமே. அப்படியான அரசியல்வாதிகள் கடந்த காலத்தின் வடுக்களுக்கு அப்பால் அய்க்கிய சிறீலங்காவை இட்டுச் செல்ல உதவ வேண்டும்.

0 கருத்துகள்:

Post a Comment