Search This Blog n

14 December 2012

ஏகலைவர்கள் குருவாக வருவதை துரோணாச்சாரிகள் ஒருபோதும் ?


வவுனியாவில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான குழுவினர் சந்தித்திருந்தனர்.
இதன்போது, கைதான மாணவர்களில் ஒருவர், தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக வருவேன் என்று கூறினாராம். அந்த மாணவனின் நம்பிக்கைக்கும் மன உறுதிக்கும் எங்கள் பாராட்டுக்கள். ஆனாலும் அந்த அன்பு மாணவன் சிங்களவர்களின் அரசியலைப் புரிந்து கொண்டிருந்தாலும் எங்களவர்களின் அரசியலைப்புரிந்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து வேதனைப்பட்டோம்.
அன்புச் சகோதரா! ஏகலைவர்கள் குருவாக வருவதை துரோணாச்சாரிகள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொள்க. உங்கள் தமிழ் உணர்வும் தடுப்பு முகாம்களில் நீங்கள்படும் வதைகளும் தமிழ் உணர்விற்கான உங்களின் கடும் உழைப்பாக-முயற்சியாக இருக்கலாம். ஆனால் துரோணர்களுக்கு அதுதான் கட்டை விரல். அதைத்தான் அவர்கள் தானமாகக் கேட்பார்கள்.
தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் வாழவிட்டு, உங்கள் உணர்வுகளுக்கு நெய்யூற்றி அக்கினித் தீ மூட்டி தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளும் எங்கள் துரோணர்களுக்கு நீங்கள் ஏகலைவன்கள். அன்புத் தம்பிகாள்! ஒன்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக் யாரைச் சந்தித்தாலும் அவருடன் குறைந்தது இரண்டு பேர் இருப்பார்கள்.
ஆனால் எங்கள் சம்பந்தன் ஐயா ஜனாதிபதியை தனித்துச் சென்றுதான் சந்திப்பார். அந்தத் தனிமை எதற்கானது? மிக நீண்ட அரசியல் அனுபவமுடைய, ஆரம்ப காலங்களில் தமிழர்களுக்காக, சிறை சென்ற மாவை சேனாதிராசாவையாவது அவர் கூட்டிச் செல்லலாம் அல்லவா? ஏன் அதைச்செய்யவில்லை. இப்போது கூட, பிரதம நீதியரசருக்கான விசாரணைகுழுவில் சம்பந்தர் இடம்பெற்றது ஏன்? நீங்கள் ஆச்சு உங்கள் விசாரணை ஆச்சு என்று பேசாமல் இருந்திருக்கலாமல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை.
ஓ...! பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவனின் தாய் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து துணைவேந்தரின் அலுவலகம் வரை ஐயகோ! என்று அழுத ஒலி கேட்டு கலங்காதவர் யாரும் இருக்க முடியாது. உன் தாயின் கண்ணீரில் என் அரசியல் பிழைப்பு என்ற வஞ்சத்தனம் ஒழியும்வகையில் உங்கள் அரசியல் இலக்கை நிறைவேற்றுங்கள். அழுதாலும் சிரித்தாலும் நாம் அனைவரும் என்ற நிலைமை உருவாக வேண்டும். அப்போது தான் உரிமை வெல்லப்படும்

0 கருத்துகள்:

Post a Comment