சுவிட்சர்லாந்து கறுப்பு பணம்
பதுக்குவோரின் புகலிடமாக உள்ளதென உலக நாடுகள் பலவும் கூறி வருகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட சில உலகநாடுகள், கறுப்பு பணத்தை பதுக்குவதற்கான புகலிடமாக
சுவிட்சர்லாந்து வங்கிகள் விளங்குவதை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை
எடுக்குமாறு சுவிட்சர்லாந்து நாட்டு அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வங்கிக் கணக்கில் வராத கறுப்பு பணத்தை பெறுவதை தடை செய்து அதிரடி சட்டம் ஒன்றை கொண்டு வர சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டம் வந்தால் வங்கிகள் மட்டுமல்லாது சுவிட்சர்லாந்தில் உள்ள நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் கணக்கில் வராத யாருடைய பணத்தையும் எந்த நாட்டிலிருந்தும் பெற முடியாத நிலை உருவாகி விடும். இதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பாக வரைவு மசோதா ஒன்றை புத்தாண்டில் அளிக்குமாறு சுவிட்சர்லாந்து நாட்டு அரசின் சார்பில் முடிவு எடுக்கிற உயர் அமைப்பான சுவிட்சர்லாந்து பெடரல் வாரியம், அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்ன் நகரில் நடந்த பெடரல் வாரியக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சுவிஸ் பெடரல் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சினைகளை ஒடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. எனவே புத்தாண்டில் கறுப்பு பண பதுக்கலுக்கு எதிரான சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு கொண்டு வந்து விட்டால், அது கறுப்பு பண முதலைகளுக்கு பெருத்த அடியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது |
0 கருத்துகள்:
Post a Comment