போரில் உயிரிழந்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று நிகழ்வை நடத்தமுடியும் என்றால், தமிழ் மக்களுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு தமிழ் மாணவர்கள் ஏன் அஞ்சலிசெலுத்தக் கூடாது?
ஐயோ அம்மா ! அடிக்காதேங்கோ சேர் ! இந்தக் காட்டுக் கத்தல்களை காதில் வாங்காத படைச்சிப்பாய்கள் தாக்குவதற்காகவே களமிறக்கப்பட்டது போல தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருந்தார்கள். செத்த பாம்பை அடிப்பது போல் தனித்து மாட்டுப்பட்ட ஒருவன் மீது கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தமது வீரத்தைக் காட்டினார்கள்.
தமிழர்களது உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து அதனால் வந்த விளைவுகளை தென்னிலங்கை மறந்து விட்டது. அதனால் மீண்டும் தமிழர்களது தமிழ் மாணவர்களது உணர்வுகளைச் சீண்டும் வகையில் அரச படைகள் செயற்படத் தொடங்கியுள்ளன.
கடந்த வருடம் அளவெட்டியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அடிதடி நடத்திய இராணுவத்தினர் அதன் பின்னர், நாவாந்துறையில் கிறீஸ்பூதம் என்ற பெயரில் இளைஞர்களையும், பொதுமக்களையும் மூர்க்கத்தனமாகத் தாக்கி கைது செய்தனர்.
வருடாந்தம் தாங்கள் ஏதாவது அடாவடித்தனத்தை செய்ய வேண்டும் என்பதற்காகவே இராணுவத்தினர் இவ்வாறான கைங்கரியங்களில் ஈடுபடுகின்றனர். யாழ். குடாநாட்டில் சிவில் நிர்வாகம் வழமைக்குத் திரும்பி விட்டதாக கூறுகின்ற இணக்க அரசியல் நடத்துபவர்களுக்கு இராணுவத்தினரின் இவ்வாறான தாக்குதல்கள் தெரிவதில்லை.
தமிழர்களுக்காகத் தமது இன்னுயிர்களை உவந்தளித்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமையி ருக்கின்றது. இறந்த தனது சகோதரனை, சகோதரியை, உறவினர்களை நினைவு கூருவதற்கு யாரும் தடைபோட முடியாது.
போரில் உயிரிழந்த படையினருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழ் மாணவர்களது ஒரு நாள் கல்வியைப் பாழடித்து வடமாகாண ஆளுநர் பலாலியில் மே மாதம் 18 ஆம் திகதி நிகழ்வை நடத்துகின்றார். தமிழ் மாணவர்கள் கட்டாயத்தின் பேரால் அங்கு சென்று படையினருக்கு தாமரைப் பூ கொடுக்கின்றனர்.
போரில் உயிரிழந்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று நிகழ்வை நடத்த முடியும் என்றால், தமிழ் மக்களுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு தமிழ் மாணவர்கள் ஏன் அஞ்சலி செலுத்தக் கூடாது? பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர்தினம் இந்த வருடம் அனுஷ்ட்டிப்பதற்கு அனுமதிக்க கூடாதென்பதிலும், மாணவர் களால் ஈகச்சுடர் ஏற்றப்படக் கூடாதென் பதிலும் படையினர் உறுதியாக இருந்தனர்.
இதனால்தான் நவம்பர் 27 ஆம் திகதி பல்கலைக்ககத்தினுள்ளே படைப் புலனாய்வாளர்களை உலாவவிட்டதுடன், ஆண்கள் விடுதியிலும் மற்றும் பல்கலைக்கழகத்தினுள்ளும் படையினரையும் நிறுத்தியிருந்தனர். ஆனால் இவர்களது கண்களில் மண்ணைத்தூவி இவர்கள் எதிர்பார்க்காத விதமாக பெண்கள் விடுதியில் ஈகச்சுடர்கள் எரியத் தொடங்கின.
அதனால் படையினர் பெண்கள் விடுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து ஈகச்சுடர்களை அணைத்தனர். பெண்களின் விடுதிக்குள் பெண்படையினர் இல்லாமல் சென்று தமது வீரதீரங்களை காட்டிவிட்டு வந்தனர். அதற்கிடையில் ஏனைய இடங்க ளிலும் மாவீரர் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு விட்டன. மேலும் மாணவர்கள் படையினரையும், படைப் புலனாய்வாளர்களையும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றியிருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே அமைதியான முறையிலேயே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முயன்றனர். அதற்கு கூட படையினர் அனுமதிக்கவில்லை. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெறும் நிகழ்வுக்கு படையினர் எவ்வாறு வருகைதர முடியும்.
அவர்கள் உள்ளே நுழைவதற்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது? மேலும் குடாநாட்டில் சிவில் நிர்வாகம் நடைமுறையில் இருப் பதாகவே எடுத்துக் கொண்டால், படையினர் எவ்வாறு பல்கலைக் கழகத்துக்குள் அத்துமீறி பிரவே சிக்கலாம்? பல்கலைக்கழகத்துக்குள் படையினர் அத்துமீறி நுழைந்ததைக் கண்டித்து மாணவர்களால் அமைதியான முறையில் நவம்பர் 28 ஆம் திகதி கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் கண்டன உரைகளை முடித்துக் கொண்டு பல்கலைக்கழக பிரதான வாயில் வழியாக வெளியே வந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள விஞ்ஞானபீட வாயில் வழியாக உள்ளே நுழைவதற்காக வளாகத்தை விட்டு வெளியில் வந்தனர். இவர்கள் எப்போது வெளியில் வருவார்கள் என்று காத்திருந்த பொலிஸார் உடனடியாகவே சென்று மாணவர்களை கலைந்து விடுமாறு தெரிவித்தனர்.
அதற்கு மாணவர்கள் அமைதியான முறையில்தான் நாம் போராட்டத்தை நடத்துகின்றோம் என்று பதில் தெரிவித்து முடிப்பதற்கு முன்பே, மாணவர்களை அடிப்பதற்கான உத்தரவை விடுப்பதற்காக காத்திருந்தவர் போல அதிகாரி ஒருவர் மாணவர்கள் மீது தடியடி நடத்துமாறு தெரிவித்தார். இதனை மாணவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. இருப்பினும் தப்பித்து சிதறி பல்கலைக்கழக வளாகத்தினுள் ஓடினர். ஓடும்போது தடுக்கி வீழ்ந்த மாணவர்களை சுற்றிச் சுற்றி பொலிஸார் தாக்கினர்.
ஏற்கனவே பொலிஸாருடன் வந்திருந்த இராணுவத்தினர் இதுதான் சந்தர்ப்பம் என்று கையில் கிடைத்த வயர்கள், கம்பிகளுடன் மாணவர்கள் மீது தாக்கத் தொடங்கினர். மாண வர்களை அடிப்பதற்காகவே அவர்கள் பொலிஸாருடன் களமிறக்கப்பட்டனர். சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு இல்லை என்று முழங்கும் அரசதரப்பு இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றது?
மேலும் ஊடகவியலாளர்கள் தாம் ஊடகவியலாளர்கள் என்று இராணுவத்தினருக்கு அடையாளப்படுத்திய பின்பும் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர் இராணுவத்தினர். இராணுவத்தினரின் அடிதடிகளைப் படம் பிடித்த ஊடகவியலாளர்களைக் கலைத்துப் பிடித்த இராணுவத்தினர் அவர்களின் புகைப்படக் கருவிகளின் படங்களை அழித்தனர்.
ஊடகவியலாளர் ஒருவர் தன்னை ஊடகவியலாளர் என்று தெரியப்படுத்தி அடையாள அட்டையை இராணுவத்தினரிடம் காட்டியதும் அதனைப் பறித்த இராணுவத்தினர் அவர் கத்திக்குளறியும் கூட அடித்துக் காயப்படுத்தினர். மேலும் ஊடக மாணவிகள் மீதும் இராணுவத்தினர் வயர்களினால் தாக்கியுள்ளனர்.
ஒரு சில மாணவர்களை பொலிஸார் கைது செய்து அழைதுச் சென்று மீண்டும் தமது பூட்ஸ் கால்களால் தாக்கியுள்ளனர். சிங்களத்தில் பதிலளிக்க முயன்ற மாணவன் ஒருவனைப் பார்த்து பொலிஸ் தரப்பு, நீ சிங்களவனா? என்று கேட்க, இல்லை தமிழன் என்று சொன்னதும் எட்டி உதைந்து அடித்தார்.
அத்துடன் தமிழர்கள் எல்லாம் புலி என்றும் சான்றிதழ் வழங்கிச் சென்றார் அந்த பொலிஸ் அதிகாரி. மேலும் பொலிஸார் கைது செய்த மாணவர்கள் எல்லோரையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பலர் தமது கைத் தொலைபேசிகளில் படம் எடுத்துச் சென்றனர். தங்களது இத்தனை அடாவடிகளையும் செய்த பின்னர், மாண வர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கிய திருப்தியில் படையினர் திரும்பினர்.
இதன் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் படைப் புலனாய்வாளர்களது நெருக்குதல்கள் தொடர்ந்தன. வைத்தியசாலலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வந்து சேர்ந்த படைப் புலனாய்வாளர்கள் மாணவர்களை மிரட்டத் தொடங்கினர்.
இத்தனைக்கும் நோயாளர்களைப் பார்வையிடும் நேரம் முடிந்த பின்னரே படைப் புலனாய்வாளர்கள் குறித்த விடுதிக்குச் சென்று மாணவர்களை மிரட்டினர். மாணவர்கள் மிரட்டப்படுவதை வைத்திய சாலையிலிருந்து எவரும் கண்டும் காணாதது போல் இருந்தனர். மாணவர்களுடன் படைப் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக நின்று கொண்டிருந்த போதும் அவர்களை வெளியேற்றும் முயற்சி கூட எடுக்கப்படவில்லை.
இறுதியில் மாணவர்கள் தமக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறாது தப்பித்துச் சென்றுள்ளனர். தமிழ் மாணவர்கள் என்ற காரணத்தினால் அடியையும் வாங்கி, அடி வாங்கியதற்கு மருந்தும் கட்டாமல் வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இராணுவத்தினராலும், இராணுவப் புலனாய்வாளர்களாலும் இத்துணை அட்டகாசங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தேறுகின்ற போதும், வாய்கூசாமல் யாழ்ப்பாணத்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை, சிவில் நிர்வாகம் நடக்கின்றது என்று சொல்லி இணக்க அரசியல் நடத்திவிட முடியுமா?
0 கருத்துகள்:
Post a Comment