பறக்கும் தட்டுக்கள். மெக்சிகோ புரளியால் பரபரப்பு.மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் பேரழிவை சந்திக்கப் போகிறது.. டிசம்பர் 21,ம் தேதியோடு உலகம் அழியப் போகிறது’’ , உலகம் முழுவதும் இதுதான் தற்போதைய பரபரப்பு பேச்சு. அந்த சம்பவத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் கவுன்ட் டவுன் பரபரப்பாக உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. ‘அச்சச்சோ என்னவெல்லாம் ஆகுமோ’ என்ற பதற்றத்தில் பிரத்யேக பிரார்த்தனை, பாவமன்னிப்பு ஜெப கூட்டம் ஒரு பக்கம்.. ‘வுடு மாமு. டோன்ட் ஒர்ரி’ என்று டேக் இட் ஈஸியாக உற்சாகம், கொண்டாட்டம், ஸ்பெஷல் பார்ட்டி.. என அமர்க்களமாய் ஒரு பக்கம் என கலவை சம்பவங்களால் உலகம் களைகட்டியிருக்கிறது.
உய்னுல், பக்துன்.. மிரட்டும் ‘மாயன்’
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் மக்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள். தற்போது மெக்சிகோ, கவுதமாலா நாடுகள் அமைந்திருக்கும் மத்திய அமெரிக்க பகுதியில் கி.மு.2000 முதல் கி.பி.250 வரை வாழ்ந்தவர்கள் மாயன் இன மக்கள். மத்திய அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் இப்போதும் வசிக்கும் பழங்குடியின மக்கள் சிலர் தங்களை மாயன் வம்சாவளியினர் என்று கூறிக்கொள்கிறார்கள். எழுத்துக்களை உருவாக்கியது, கட்டிட கலை, வானியல் சாஸ்திரம், மத நம்பிக்கை உள்பட பல விஷயங்களில் அதிக அறிவு உள்ளவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் உருவாக்கிய காலண்டர்தான் தற்போது உலகை பதற்றத்திலும் பீதியிலும் ஆழ்த்தியிருக்கிறது. மாயன் மக்கள் வடிவமைத்த காலண்டர்படி, வருடத்துக்கு மொத்தம் 360 நாட்கள். 20 நாட்கள் கொண்டது ஒரு ‘உய்னுல்’ (மாதம்). 18 உய்னுல் கொண்டது ஒரு துன் (ஆண்டு). 20 துன் கொண்டது ஒரு காதுன். 20 காதுன் கொண்டது ஒரு பக்துன் (சுமார் 394 ஆண்டு) என்கிறது அந்த கணக்கு.
நாலாவது உலகம் நாலு நாள் பாக்கி
இறைவன் முதலில் ஒரு உலகை படைத்தார். அது சரியாக வராததால் இன்னொன்றை படைத்தார். அதுவும் சொதப்பியதால் வேறொன்று. இப்படி மூன்று உலகங்களை இறைவன் அடுத்தடுத்து படைத்திருக்கிறார். அந்த மூன்றாவது உலகம் 13 பக்துன்களில் (தோராயமாக 5125 ஆண்டுகள்) அழிந்துவிட்டது. அதன் பிறகுதான், மக்களாகிய நம்மைக் கொண்டு இறைவன் இந்த புதிய உலகை படைத்திருக்கிறார். இந்த புதிய உலகமும் 5125 ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று அந்த காலண்டர் மூலம் தெரியப்படுத்துகிறார்கள் மாயன் மக்கள். அவர்களது கூற்றுப்படி, கி.மு. 3114,ம் ஆண்டு ஆகஸ்ட் 11,ம் தேதி தொடங்கிய 4,வது உலகம் 2012,ம் ஆண்டு டிசம்பர் 21,ம் தேதியோடு அழிந்துவிடும். இதுதான் மாயன் காலண்டரின் சாராம்சம். ‘‘வானியல் சாஸ்திரம் உள்பட பல விஷயங்களிலும் கைதேர்ந்தவர்கள் மாயன் மக்கள். நான்காவது உலகமும் 5125 ஆண்டுகளில் அழிந்து, அதன் பிறகு 5,வது உலகம் தோன்றும் என்று கூறவில்லையே. ஸோ.. உலகத்துக்கு முற்றுப்புள்ளி வரும் 21,ம் தேதி கன்பார்ம்’ என்கிறது உலகம் அழிவு ஆதரவு தரப்பு. சூரியனில் உருவாகும் காந்தப் புயல் சுழன்றடித்து பூமியை நோக்கி வீசப் போகிறது. ராட்சத புயலில் சிக்கி பொடிப்பயல் பூமி தூள் தூளாகப் போகிறது என்றும் இணையதளத்தில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. புதுவை கடலில் நீரோட்டம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதற்கு பதிலாக உல்ட்டாவாகியுள்ளது. எசகுபிசகாக ஏதோ நடக்கப் போகிறது என்று மீனவர்களும் தங்கள் பங்குக்கு பீதி கிளப்புகிறார்கள். ‘தப்பு செஞ்சிட்டேன்.. மன்னிச்சிக்க மச்சான்’ என்று கைதிகள் கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்து கதறுவதும்.. இருக்கிற சொத்து சுகங்கள், வீடு, பங்களாக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு எழுதி வைப்பதும்.. கிடைக்கிற வழிபாட்டு தலங்களில் எல்லாம் புகுந்து பிரார்த்தனை நடத்துவதுமாய்.. அழிவு கவுன்ட் டவுன் பல நாடுகளில் அமோகமாய் நடக்கிறது.
கேவலம்.. கேனத்தனம் விஞ்ஞானிகள் உர்ர்..
டிவியிலும் ரேடியோவிலும் இதுபற்றிய செய்திகளை கேள்விப்பட்டாலே ‘ஸ்டாப் இட்’ என்று டென்ஷனாய் கத்துகிறார்கள் விஞ்ஞானிகள். ‘‘அண்டவெளியில் நடந்த பெருவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சூரியனில் இருந்து 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதுதான் நமது பூமி. உருவான 100 ஆண்டுகளில் உயிரினம் தோன்றியது. சூரியனில் இருந்து கிடைக்கும் சக்தி உள்பட பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு ஆராய்ந்தால், இன்னும் 50 கோடி ஆண்டு முதல் 230 கோடி ஆண்டு வரை எந்த பிரச்னையும் இல்லாமல் உலகம் இயங்கும். பல கோடி ஆண்டுகள் இடைஞ்சல் இல்லாமல் இயங்கப்போகிற பூமிக்கு 2010, 2011, 2012 என அல்பத்தனமாக ஆயுள் குறிப்பது கேவலமாக, கோமாளித்தனமாக, கேனத்தனமாக இருக்கிறது’’ என்கிறது பகுத்தறியும் விஞ்ஞானிகள் தரப்பு.
நோ பிராப்ளம் ஜோதிட தகவல்
இரண்டு நாளில் உலகம் அழியப்போகிறது என்ற கூற்றை ஜோதிடர்களும் அதிரடியாக மறுக்கிறார்கள். ‘‘சனி நீச்சம், செவ்வாய் நீச்சம், சனி,செவ்வாய் பார்வை போன்ற கிரக நிலைகள் இருப்பதுதான் கெடுபலன்களை தரும். சுனாமி, சூறாவளி, பயங்கர நாசம் ஏற்படுத்தும் ரசாயன, தீ விபத்துகள் நடக்கப்போவதை கிரக நிலைகளை வைத்து ஓரளவு யூகித்து விடலாம். கிரக நிலைகள் தாறுமாறாக இருந்தால், உலகம் அழிவுக்கான அறிகுறி என்று கருதலாம். ஆனால், தற்போது கிரகங்களின் நிலைகள் நல்லபடியாகவே இருக்கின்றன. சனி நன்கு உச்சத்தில் இருப்பதால் இயற்கை சீற்றங்கள் வருவதற்குக்கூட வாய்ப்பு இல்லை. உலகம் அழியும் என்பதை நம்பத் தேவையில்லை’’ என்கின்றனர்.
‘டோன்ட் ஒர்ரி மாமூ.. சரக்கு அடிக்கலாம் வா’
உலகம் அழியும் மேட்டரிலும் டேக் இட் ஈஸி பாலிசிதாரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ‘அதான் உலகம் அழியப் போகுதே. இன்னும் ஏன் படிப்பு, எக்சாம், மார்க்கு, வேலை, லீவு, லாஸ் ஆப் பே, பர்மிஷன், சொந்த வீடு கனவு, லோன், கவர்மென்ட் வேலைனு அலட்டிக்கிறீங்க. எதை பத்தியும் கவலைப்படாதீங்க. உலகம் இருக்கிற வரை சந்தோஷமா இருப்போம். உலகம் அழிவதை ஜாலியாக கொண்டாடுவோம். வாங்க மஜாவா இருப்போம்’ என்று ஸ்பெஷல் விருந்துக்கும் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் டிஸ்கொதே, ஸ்டார் ஓட்டல்களில் ‘டிசம்பர் 21‘ ஸ்பெஷல் பார்ட்டிகள் நடக்க இருக்கின்றன. பதற்றம் ஒரு பக்கம்.. கொண்டாட்டம் ஒரு பக்கமாக பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கிறது ‘உலகம் அழிவு’ கவுன்ட் டவுன். 21,ம் தேதிக்கு பிறகு உலகம் என்னதான் ஆகும்? மாயன் காலண்டர் சொல்வதுபோல பூமாதேவி வாயை பிளக்கப் போகிறாளா..? ‘போங்கடா லூசுப் பசங்களா’ என்று சிரித்துவிட்டு வழக்கம்போல சுற்றப் போகிறாளா..? இன்னும் ரெண்டே நாள்தான்.. வெயிட் அண்ட் ஸீ!
அட்றா சக்க.. அட்றா சக்க
அழிவை சந்திக்கும் கடைசி 3 நாட்கள் உலகம் முழுவதும் கும்மிருட்டாகும் என்று பரவிய தகவலால் சீனாவின் சிச்சுவான், ஜிலின் பகுதிகளில் உள்ள கடைகளில் மெழுகுவர்த்திகள் விற்று தீர்ந்துவிட்டதாம்.
ரஷ்யாவில் பின்னிப் பெடலெடுக்கிறது அழிவு பீதி. அன்னிய முதலீடு, பெட்ரோல் விலை உயர்வு போல உலகம் அழிவு சமாசாரம் பற்றியும் டிவிக்களில் விவாதங்கள் அனல் பறக்கிறது. அண்டவெளியை நாலைந்து ஆங்கிள்களில் படம் பிடித்து தொடர்ச்சியாக பல டிவிக்கள், இணையதளங்களில் ‘நேரடி ஒளிபரப்பு’ ஓடிக்கொண்டிருப்பது ஹைலைட்.
எல்லாம் அழியப் போகிறது. உங்களது சொத்துக்களை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு எங்களது பக்தி மார்க்கத்தில் சேர்ந்துவிடுங்கள்’ என்று பிரசாரம் செய்த சீன ஆசாமிகள் சுமார் 100 பேர் ஷாங்சி, சிச்சுவான் பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் குவாங்ஷன் கவுன்டியில் கத்தியுடன் பள்ளிக்கூடத்தில் புகுந்த ஒருவர் 23 குழந்தைகளை குத்திவிட்டார். போலீஸ் கேட்டதற்கு, ‘அதான் உலகமே அழியப்போகுதே சார்’ என்றாராம் நக்கலாக. அவரை நொங்கு நொங்கு என்று நொங்கி எடுத்து வருகின்றனர் போலீசார்.
பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரக வாசிகள் வந்திறங்குவதாக, ‘வந்திறங்கியதை என் ரெண்டு கண்ணால் பார்த்ததாக’ அவ்வப்போது வதந்திகள் கிளம்பும். மாயன் மக்கள் வாழ்ந்த மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் கடந்த 1,ம் தேதி ஏராளமான பறக்கும் தட்டுகள் தரையிறங்குவதாக புரளி பரவியது. அழியப் போகும் உலகத்தில் இருந்து மக்களை மீட்டுக்கொண்டு வேற்றுக்கிரகத்துக்கு அவை பறக்கப்போகின்றன. இதற்காக பல நாடுகளில் இருந்து விமானம் பிடித்து ஏராளமானோர் மெக்சிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் குவிந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த உலகமும் சீட்டுக்கட்டு போல சரிவதை பார்த்தபடியே, அவர்கள் மட்டும் பறக்கும் தட்டுகளில் ஏறி வேற்றுக்கிரகத்துக்கு போய் வாழ்க்கை நடத்தப்போகிறார்கள்.. வதந்திகளும் புரளிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.
நல்ல சேதி சொல்லும் நாஸ்டர்டாம்
உலகில் எப்போது, என்ன நடக்கப் போகிறது என்று பல சம்பவங்களை மிக துல்லியமாக கணித்து பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் மிகேல் டி நாஸ்டர்டாம். பிரான்சின் புரோவென்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1503,ல் பிறந்து 1566,ல் இறந்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வைத்தியர், வானியல் நிபுணர் என்று பல முகங்கள் கொண்டவர். கிரக நிலைகளை கூட்டிக் கழித்து ஜோதிடம் சொல்பவர். சிம்பிளாக பிரான்ஸ் சித்தர். உலகில் எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கப் போகிறது என்று கூறி 4 வரி செய்யுள் வடிவில் அவர் வெளியிட்ட கருத்துகள் 1550,களில் தொகுப்பு புத்தகங்களாக தொடர்ந்து வெளியானது. ‘இது ஜோதிடத்தின் தீர்ப்பு’ என்று கூறி திட்டவட்டமாக அவர் வெளியிட்ட கருத்துகள் மக்கள் மத்தியில் வரவேற்பை மட்டுமின்றி எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. சின்னதும் பெரியதுமாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரூடங்களை அவர் கூறியுள்ளார். ‘உலக மையத்தில் வெடிக்கும் தீ, நியூ சிட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும், வானுயர்ந்த இரு பாறைகள் தகர்க்கப்படுவது மாபெரும் போரை ஏற்படுத்தும்’ என்பது போன்ற வரிகளுடன் அவர் கூறியிருந்தது நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தை பற்றியதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி சுட்டு கொல்லப்பட்டது, அவரது மகன் ஜூனியர் கென்னடி விமான விபத்தில் பலியானது, இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது, 1986,ல் சேலஞ்சர் விண்கலம் வெடித்து சிதறியது, ஜப்பான் அணுகுண்டு வீச்சு, ஹிட்லர் பிறப்பு ஆகியவை குறித்தும் நாஸ்டர்டாமின் ஆரூட செய்யுள்களில் குறிப்பு காணப்படுவதாக கூறுகின்றனர். ஒரு மகிழ்ச்சியான சமாசாரம்.. ‘‘என் கணிப்பு இன்றில் இருந்து 3797 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்’’ என்று நாஸ்டர்டாம் கூறியிருக்கிறார். அவர் இதை சொன்னது 1555,ம் ஆண்டில். எனவே, அவரது கணக்கின்படி உலகம் அழிவு 2012,ல் இல்லை என்பதுதான் என்கின்றனர் நாஸ்டர்டாம் நம்பிக்கையாளர்கள். அப்போதும் இதேபோல உலகம் இன்னொரு முறை பரபரப்பாகி அழிவு பற்றி விவாதிக்கும்
0 கருத்துகள்:
Post a Comment