கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சரத் பக்தேவல யாழ். பல்கலை. பீடாதிபதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்த குற்றத்தடுப்புப் பிரிவுப் பணிப்பாளருடன், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி கலாநிதி எஸ்.பாலகுமார் மற்றும் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் விசேட சந்திப்பை மேற்கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உளப் பாதிப்புக்களை நிறுத்தி பல்கலைக்கழக செயற்பாடுகள் மீள தொடங்குவதற்கு உதவ வேண்டும் எனவும் பீடாதிபதியினர் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டனர்.
இதற்குப் பதிலளித்த பணிப்பாளர், தான் கொழும்பு சென்று உயரதிகாரிகளுடன் பேசி மாணவர்களின் விடுதலையை விரைவுபடுத்துவது எனவும், வேறு மாணவர்கள் எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் எனவும் உறுதியளித்தார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 மாணவர்களையும் யாழ். பீடாதிபதிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் உடல், உள ரீதியாக எவ்வித பாதிப்புமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக பீடாதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
Post a Comment