Search This Blog n

18 December 2012

உலக மக்களே மட்டக்களப்பு மாவட்டத்தை திரும்பி பாருங்கள்



மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் பலவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு அவசியமாக தேவைப்படும் பொருட்களை உடனுக்குடன் வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சித்தாண்டி, வந்தாறுமூலை, ஐயங்கேணி, தளவாய், ஏறாவூர்,கொம்மாதுறை, வந்தாறுமூலை,முறக்கொட்டாஞ்சேனை, தேவாபுரம், கோப்பாவெளி, ஈரளக்குளம், பெரியவட்டவான், பூலாக்காடு, பொண்டுகள்சேனை, இலுக்கு, சந்திவெளி, கிரான், பதுளை வீதியில் அமைந்துள்ள கிராமங்கள், மயிலவட்டவான், வேப்பவட்டுவான், செங்கலடியில் அமைந்துள்ள கிராமங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.{புகைபடங்கள்,}


இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 154 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 34753 குடும்பத்தைச் சேர்ந்த 135464 நபர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு காரியாலயம் தெரிவிக்கின்றது.

வெள்ளத்தால் 154 வீடுகள் முழுச் சேதத்தையும், 607 வீடுகள் பகுதிச் சேதத்தையும் அடைந்துள்ளது. இவ்வனர்த்தத்தின் மூலம் இடம்பெயர்ந்த மக்கள் 17 இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கோப்பாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வேப்பவட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயம்,சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம்,மயிலவட்டவான் வித்தியாலயம்,வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம்,சித்தாண்டி மகா வித்தியாலயம்,சித்தாண்டி சமுர்த்தி கட்டடம்,சித்தாண்டி இராமகிருஷ்ணா வித்தியாலயம், ஈரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,பெரியவட்டவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பூலாக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கொண்டுகள்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உட்பட பல இடங்கள் முக்கிய இடைத்தங்கல் முகாமாக உள்ளது.



இவ்வேளை, மயிலவட்டவானின் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி இருவர் இறந்ததுடன் ஒருவர் சார்பாக இதுவரை தகவல் இல்லை. பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியமையின் காரணமாக வாகனப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் பல சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்ட மயிலவெட்டுவான் கிராமத்தில் நேற்றிரவு தொடக்கம் வெள்ளத்தினால் சூழப்பட்டிருந்த 103பேர் இன்று காலை படகுகளை அனுப்பி மீட்கப்பட்டதாக பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

இவர்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் பிரதேச சபை மற்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 13 முகாம்களில் 1098 குடும்பங்களைச் சேர்ந்த 4400 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய சேத விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.









0 கருத்துகள்:

Post a Comment